கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், இளம் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை மற்றும் கூட்டு பாலியல் செய்ததாக 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தி முடித்தனர்.
இந்த வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் கடந்த மே 13 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. நீதிபதி நந்தினி தேவி, குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்ததோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.
நீதிமன்றம் அறிவித்த இழப்பீட்டின்படி, பாதிக்கப்பட்ட பெண் A-க்கு ரூ.2 லட்சம், B-க்கு ரூ.15 லட்சம், C-க்கு ரூ.10 லட்சம், D-க்கு ரூ.10 லட்சம், E-க்கு ரூ.8 லட்சம், G-க்கு ரூ.15 லட்சம், H-க்கு ரூ.25 லட்சம் என இழப்பீடு அறிவிக்கப்பட்டது. (பாதிக்கப்பட்ட பெண் F இறுதி சாட்சியத்திற்கு வரவில்லை).
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் என நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, தீர்ப்பு வழங்கப்பட்ட 15 நாட்களுக்குள், தமிழக அரசு அறிவித்த ரூ.25 லட்சம் நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.