டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் 2 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது.
டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடு புகார் தொடர்பாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்கள் சோதனையில் ஈடுபட்டனர். விசாகன் வீட்டிற்கு வெளியே கிழிந்த நிலையில் இருந்த WHATSAPP SCREENSHOTகளின் பிரிண்ட் அவுட்களையும் அமலாக்கத் துறையினர் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

விசாகன் மற்றும் அவரது குடும்பத்தினர் வங்கிக் கணக்கு பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை ஆய்வு செய்தனர். விசாகன் பயன்படுத்தும் மடிக்கணினியையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனிடையே டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு 2 நாட்கள் அழைத்துச் சென்று அமலாக்கத்துறையினர் விசாரித்தனர். நேற்று (மே 17) காலை 10:40 மணி முதல் இரவு 9:45 வரை 11 மணி நேரம் விசாகனிடம் விசாரணை நடைபெற்றது. இந்தநிலையில், விசாகன் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நள்ளிரவு நிறைவடைந்தது.

டாஸ்மாக் நிறுவனத்தில் போலி ஆவணங்கள், போலி ரசீதுகள் மூலம் டெண்டர்கள் பெறப்பட்டு நிதியை மோசடி செய்து தொடர்பாகவும், போலி கம்பெனிகள் மூலம் பல்வேறு நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்றதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது. டாஸ்மாக் முறைகேட்டில் லஞ்சப்பணம் தரகர்கள் மூலமாக துணை மேலாளர்கள் மற்றும் மூத்த துணை மேலாளர்களுக்கு நெட்வொர்க் மூலம் பரிமாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
