தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாமக்கல், ஈரோடு, சேலம் மற்றும் மதுரை ஆகிய 13 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை அய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
வரும் 30ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாமக்கல், ஈரோடு, சேலம், திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கோவை மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் கனமழையும் பெய்யக்கூடும்.
மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்கள், நாமக்கல், ஈரோடு, சேலம் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஜூலை 1ம் தேதி லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஏனைய தமிழகப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

