தமிழகத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக இன்று பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையின் ஒரு பகுதியாக, வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்து தாழ்வு நிலை நாளை மறுநாள் புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிக கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெல்லை மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்ச் அலெர்ட்டும் விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தமிழகத்தில் தஞ்சை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, விருதுநகர், கரூர், அரியலூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகையிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி ஆகிய 4 தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் முதலில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், சற்று நேரத்திலேயே மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் அறிவித்துள்ளார். கொடைக்கானலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 22 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
