மழைக்காலம் நம் வாழ்வில் வளம் தரும் காலமாக இருக்கட்டுமே அன்றி, நோய்களை உருவாக்கும் காலமாக மாறக்கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இது குறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, திருவள்ளூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், மக்கள் உடல்நலம் குறித்து மிகுந்த கவலை தருகிறது. மழைக்காலம் தொடங்கியுள்ள இந்நேரத்தில், டெங்கு தொற்றைத் தடுக்க விழிப்புணர்வு மிக அவசியமானதாகும்.
இந்த நோயை எதிர்கொள்வதில் ஒவ்வொருவரும் மிகுந்த பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். நமது வீடு மற்றும் அதன் சுற்றுப்புறம் சுத்தமாக இருப்பது மட்டுமே டெங்கு பரவலைத் தடுக்கும் முக்கியமான முன்னெச்சரிக்கை வழியாகும். வீடுகளின் அருகே தண்ணீர் தேங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தொட்டிகள், பழைய டயர்கள், பூந்தொட்டிகள், பிளாஸ்டிக் வாளிகள் மற்றும் திறந்த பாட்டில்கள் போன்றவற்றில் நீர் தேங்கியிருந்தால் உடனே அகற்ற வேண்டும். குடிநீர் தொட்டிகளைப் பாதுகாப்பாக மூடி வைப்பதும், தினசரி சுத்தம் செய்வதும் மிகவும் அவசியம்.
குழந்தைகள், வயதில் மூத்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் கொசுவலை அல்லது கொசு தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்தி தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். உடலில் காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவரின் ஆலோசனையுடன் சிகிச்சை பெற வேண்டும். தாமாக மருந்து எடுத்துக்கொள்வது ஆபத்தானது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
மழைக்காலம் நம் வாழ்வில் வளம் தரும் காலமாக இருக்கட்டுமே அன்றி, நோய்களை உருவாக்கும் காலமாக மாறக்கூடாது. சுத்தமான சூழலும், விழிப்புணர்வும் நம் உடல்நலத்திற்கும் சமூக நலத்திற்கும் அவசியமான அடிப்படைகள் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து வாழ்கின்றனர் என்பதில் நம்பிக்கை கொள்கிறேன்.
மக்களின் ஆரோக்கியம் காக்கப்படும்போது தான் நாடும் வலுவடையும். அனைவரும் விழிப்புணர்வுடன், பொறுப்புடன் செயல்படுவோம். டெங்கு பரவலைத் தடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.