திரும்பிய பக்கமெல்லாம் “ஏங்க கூமாப்பட்டி வாங்க” என்ற கூப்பாடு கேட்டுக் கொண்டிருக்க, கோவாவை விட இன்று இளைஞர்களின் சுற்றுலாத் தல மவுசைப் பெற்றுவிட்டது விருதுநகர் மாவட்டத்திலுள்ள கூமாப்பட்டி கிராமம். இன்ஸ்டாகிராமில் கூமாப்பட்டிக்குக் கூவிக் கூவி அழைக்கும் டார்க் நைட் என்ற ஜெ.பி கோல்டு ஒரு இன்புளுயென்சர். தங்கள் ஊரின் அழகைத் தரமான விற்பனைப் பொருளாக்கி, அவர் வருமானம் ஈட்டி வருகிறார். இவரைப் போல பலரை நாம் நமது ஸ்மார்ட் போன்களில் பார்த்திருப்போம். ஆனால் உண்மையில் ஒரு இன்புளுயென்சர் இப்படியெல்லாம் செய்யலாமா?
இன்புளுயென்சர்கள் என்றால் யார்?
இன்றைய டிஜிட்டல் உலகில், இந்தக் கேள்விக்குச் சிறுபிள்ளை கூட பதில் சொல்லிவிடும். இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் போன்ற சமூக ஊடகங்களில் அதிகமான பின் தொடர்வுகளைக் கொண்டவர்கள், இன்புளுயென்சர் என்று அழைக்கப்படுகின்றனர். இதைத் தமிழில் செல்வாக்கு செலுத்துபவர்கள் என்று மொழிபெயர்க்கலாம். தொடர் செயல்பாட்டின் மூலம் மக்களின் ஆர்வத்தையும் வரவேற்பைப் பெற்று, தமது கருத்துகளைச் சமுதாயக் கருத்தாக மாற்றும் செல்வாக்கைச் செலுத்துபவர்கள் இவர்கள்தான்.
அப்படிப் பார்த்தால் உலக வரலாற்றில் ஸ்டாலின், லெனின், சாக்ரட்டீஸ், டால்ஸ்டாய் போன்ற மகா தலைவர்கள்தாம் சமூகக் கருத்துகளின் மீது தங்கள் போதனைகளைச் செல்வாக்காகச் செலுத்தி, தடம் மாற்றியவர்கள் எனலாம். தமிழில் வள்ளுவரை விடச் சிறந்த இன்புளுயென்சர் கிடையாது. அவருக்குப் பின் கருத்தாலும் செயல்களாலும் மக்களைக் கவர்ந்தவர்கள் பலர். ஆனால், இன்றைய ஸ்மார்ட் போன் உலகில் யாரெல்லாம் இன்புளுயென்சர்கள் தெரியுமா? இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுபவர்கள், நகைச்சுவை என்று ஆபாசம் காட்டுபவர்கள், காரணமின்றித் திரையில் கோரமாக முகத்தை வைத்துக்கொண்டு கத்துபவர்கள், பொழுதுபோக்கின் பெயரில் பல சில்மிஷங்களைச் செய்பவர்கள் உள்ளிட்டவர்களே
இன்றைய இன்புளுயென்சர் என்ன செய்கிறார்?
கையில் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் யார் நினைத்தாலும் இன்புளுயென்சர் ஆகிவிடலாம். அரசியல் சாடல், நக்கல் நையாண்டி, பொழுதுபோக்கு, நகைச்சுவை, சமையல் குறிப்பு, வீடு பராமரிக்கும் குறிப்பு, கிசுகிசு, விமர்சனம் என எதை வேண்டுமானாலும் பேசலாம். அறிவைப் பயன்படுத்தி ஆராய்ந்து பார்க்கத் தேவையின்றி, பார்த்ததும் கடந்து போகும் அளவுக்கான உள்ளடக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும். கூடுமான வரையில் மக்களிடம் எதிர்ப்பு வரும் என்று நமக்கே தெரிந்திருந்தாலும் சர்ச்சைக்குரிய வகையில் அதை வெளிப்படுத்த வேண்டும். அதை வீடியோவாக்கி வெளியிட்டால் கமென்ட் பகுதியில் சில கேள்விகளும் பல கழுவி ஊற்றல்களும் நடக்கும். அதற்கெல்லாம் ஆக்ரோஷமாக பதில் காணொளி வெளியிட்டுச் சண்டையைப் பெரிதாக்க வேண்டும். அட! இங்கு ஏதோ நடக்கிறதே எனப் பார்க்க இணையதளத்தில் மெய்நிகர் வடிவில் மக்கள் கூடுவார்கள். அப்படிக் கூடிவிட்டால், யாரும் ஆகலாம் வெற்றிகரமான இன்புளுயென்சர்.
“எங்களிடம் இத்தனை பின் தொடர்வுகள் இருக்கின்றன. நாங்கள் சொன்னால் இத்தனை பேர் பார்ப்பார்கள்” என்பது போன்ற புள்ளி விவரங்களைக் காட்டி, நிறுவனங்களிடம் விளம்பரம் பெற்றுச் சம்பாதிக்கலாம். சந்தைக்கு வராத பொருட்களை எல்லாம் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம். கடைகள், பொருட்களுக்கு விமர்சனங்களைச் செய்து சம்பாதிக்கலாம். காணொளிகளில் எதற்கு அதிக லைக், பார்வைகள் குவிகிறதோ, அதற்கு சமூக ஊடக நிறுவனமும் பணம் தந்து ஊக்குவிக்கும். அந்த செல்வாக்கைக் கொண்டு அடுத்தடுத்து அரசியலுக்குள்ளோ சினிமாவிலோ நுழைந்து விடலாம்.
இன்புளுயென்சர்கள் எல்லாருமே இப்படித்தானா?
இல்லை! சமூகத்திற்குத் தேவையான கருத்துகள், ஆதிக்கச் சுரண்டல்களுக்கு எதிரான குரல்கள், அதிகாரத்தால் பாதிக்கப்பட்டோரின் வலிகள், அரசால் கண்டுகொள்ளப்படாத மக்களின் அவலங்கள், அத்தியாவசியமான செய்முறை விளக்கங்கள் போன்ற பெரும்பணிகளுகளைக் கடமையாகச் செய்யும் இன்புளுயென்சர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இவர்களை விடக் கேலிக் கூத்தாடும் இன்புளுயென்சர்களுக்கே பொருளும் புகழும் செல்வாக்கும் கொட்டுகிறது.
”எதையும் தொடர்ந்து செய்து வந்தால் அது மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். அறிவார்ந்த உள்ளடக்கங்களை விட, பொழுதுபோக்கும் கேலியான உள்ளடக்கங்களைத் தினந்தோறும் வெளியிட முடியும். அதன் மூலம் தங்களைத் தொடர்ந்து மக்கள் பார்க்கும்படி சமூக ஊடகத்தில் பிரபலம் ஆகும் இன்புளுயென்சர்கள், அவர்களுக்கே தெரியாமல் இளைய சமுதாயத்திடம் சமூக ஊடக போதையை உருவாக்குகிறார்கள்” என்று உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நுகர்வோரில் பலர் இன்புளுயென்சர்களின் விளம்பரங்களை நம்பி ஏமாந்த கதைகளும் அதே சமூக ஊடகங்களில்தான் வலம் வருகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
புறாத்தூது, மனிதத் தூது, கடிதம் எனத் தொடங்கிய தொலைத்தொடர்பு, இன்று அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அதன் தகவல்கள் நம் உள்ளங்கைக்கு வந்து சேர்கின்றன. நமது உண்மைத் தகவல்களையும் உலகம் ஒரே நொடியில் பார்க்கும்படி ஆகிவிட்டது. இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியில், மக்களிடம் செல்வாக்கு செலுத்தும் இன்புளுயென்சர்களின் பணி, இன்று சமூக ஊடகங்களில் நடப்பது போல் கேலிக் கூத்தானது அல்ல என்பதை அவர்களும், மக்களும் புரிந்து கொண்டுவிட்டால், இப்பெரும் ஊடகம் உலகம் முழுமைக்கும் உதவும் கரமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.