தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 3 நாள்கள், அதி கனமழை பெய்யக்கூடும் என்பதற்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

நேற்று (27-11-2025) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டித்வா” புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (28-11-2025) காலை 0830 மணி அளவில் இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை திரிகோண மலையிலிருந்து தென்மேற்கே சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கை மட்டக்கிளப்பிலிருந்து வடமேற்கே 100 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 320 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 430 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கே 530 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை கடந்து, 30-ஆம் தேதி அதிகாலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் – புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும்.

இன்று: தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

தூத்துக்குடி, சிவகங்கை, அரியலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

நாளை (29-11-2025): வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டெல்டா மற்றும் அதனை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஏனைய கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

30-11-2025: வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.ஏனைய வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.சென்னை, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

01-12-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

02-12-2025 முதல் 04-12-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version