கோவையில் ரூபாய் 4.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு உள்ள கோவை வடக்கு, தெற்கு பதிவுத்துறை சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் கருமத்தம்பட்டியில் உருவாக்கப்பட்ட புதிய சார்பதிவாளர் அலுவலகம் இன்று திறக்கப்பட்டன.

பதிவுத் துறை வாயிலாக பொதுமக்கள் தங்கள் சொத்துக்களை தங்களின் பெயரில் பதிவு செய்தல், திருமணங்களைப் பதிவு செய்தல், அங்கங்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களை பதிவு செய்தல் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன.

இத்துறையின் செயல் திறனை மேலும் விரிவாக்கும் வகையில் அரசு புதிய அலுவலகங்களை கட்டுதல், காலிப் பணி இடங்களை நிரப்புதல், உட்கட்ட அமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த 2023 – ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதியன்று கோயம்புத்தூர் பதிவு மாவட்டம், நிர்வாக வசதிக்காக வடக்கு மற்றும் தெற்கு என பிரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கோயம்புத்தூர் (வடக்கு) பகுதியின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட பதிவாளர், மாவட்ட பதிவாளர் தணிக்கை மற்றும் 1 எண் இணை சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்டவை ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தில் தற்போது செயல்படுகின்றன.

மேலும், 2024 – 25 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின் அடிப்படையில், சூலூர் வட்டத்தில் உள்ள 21 கிராமங்களில் 9 கிராமங்களை பிரித்து புதியதாக கருமத்தம்பட்டி சார்பதிவாளர் அலுவலகம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த அலுவலகத்தில் ஆண்டிற்கு சராசரியாக 10,000 ஆவணங்கள் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய அலுவலகம் மூலம் பொதுமக்களுக்கு விரைவான, எளிமையான மற்றும் தரமான சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.இதில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version