த.வெ.க. தலைவர் விஜய் தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் விஜய், தனது வேட்புமனுவில் மனைவிக்கு ரூ.12.60 கோடி கடன் வழங்கியதாகக் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக ஆய்வு செய்யக் கோரி பெரம்பூரைச் சேர்ந்த வாக்காளர் வெங்கடேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஏற்கனவே இதே போன்ற கோரிக்கையுடன் வந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டி இந்த வழக்கையும் தள்ளுபடி செய்தது.

மனுதாரர் தனது புகாரில், விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோருக்கு இடையே விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில், அவருக்கு இவ்வளவு பெரிய தொகையைக் கடனாக வழங்கியதாகக் கூறியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஒரு தனியார் கல்வி அறக்கட்டளைக்கு விஜய் ரூ.20 கோடி வழங்கியது குறித்து முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும், வேட்புமனுவில் உண்மைத் தகவல்களை மறைப்பது தேர்தல் முறைகேடு என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, விஜய்யின் வேட்புமனுவில் உள்ள ரூ.100 கோடி சொத்து வித்தியாசம் தொடர்பான மற்றொரு வழக்கு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டதை நினைவூட்டினர். அந்த அடிப்படையில், தற்போது தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவையும் விசாரணைக்கு ஏற்க முடியாது எனக் கூறி நீதிபதிகள் நிராகரித்தனர். விஜய்க்கு எதிரான இந்த சட்டப் போராட்டங்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version