ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. பரந்த கடற்பரப்பின் மேல் வீற்றிருக்கும் முருகனை காண நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இங்கு குவிந்து வருகின்றனர். 2,000 ஆண்டு பழமையான கோயில் எனக் கூறப்படும் இக்கோயிலில் குடமுழுக்கு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த 1-ம் தேதி யாகசாலை பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கிய நிலையில், வரும் 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு நடைபெற இருப்பதால், இதனை காண்பதற்காக கோடிக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சொந்த வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் கோயில் இருக்கும் பகுதிக்கு மக்களால் வர முடியாமல் போகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக அன்று ஒரு நாள் மட்டும் உள்ளூரை சேர்ந்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து பைக் டாக்ஸிக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
