கோவையில் சில்லறை தருவதாகக் கூறி கடையில் பணத்தைப் பெற்றுக்கொண்டு, மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற மர்ம ஆசாமியின் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அந்த நபரைத் தேடி வருகின்றனர்.
கரும்புக்கடை சாரமேடு பகுதியில் உள்ள பி.பி. சம்சுதீன் என்பவருக்குச் சொந்தமான அரஃபா டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர் பொருட்களை வாங்கிக்கொண்டு, தனக்கு சில்லறை ரூபாய் நோட்டுகள் தருவதாகக் கூறியுள்ளார். பின்னர், கடையில் பணிபுரியும் நபரிடம் ரூ.22,000 பணத்தைப் பெற்றுக் கொண்டு, சில்லறை வாங்க பெட்ரோல் பங்குக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பெட்ரோல் பங்க் வாசலில் கடை ஊழியரை இறக்கிவிட்ட அந்த நபர், “சில்லறை உள்ளே இருக்கிறது” என்று கூறிவிட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கடை ஊழியர் அதிர்ச்சியடைந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த மோசடியின் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகப் பரவி வருகின்றன. பொதுமக்கள் இது போன்ற மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.