தவெக தலைவர் விஜய் அக்கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியில் தமிழகத்தில் போட்டியிடும் 234 வேட்பாளர்கள் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 30 வேட்பாளர்களையும் விஜய் அறிமுகம் செய்து வருகிறார்.
முன்னதாக மேடையில் பேசிய விஜய் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளையும் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் இளைஞர்களின் கல்வியை உறுதி செய்யும் வகையில், பி.ஹெச்.டி படிப்பு வரை ரூ.20 லட்சம் வரைம் பிணையம் இல்லாத கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என புதிய தேர்தல் வாக்குறுதியை அறிவித்துள்ளார்.
அதேபோல், டிகிரி படித்து 29 வயது நிரம்பிய வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.4,000, டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளை தடுக்க கடும் சட்டங்கள் கொண்டு வரப்படும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் அமைக்கப்படும்.
TRATA வாயிலாக அனைத்து மாநில அரசுப் பணிகளுக்கும் ஒரு நிலையான ஆட்சேர்ப்பு அட்டவணை வெளியிடப்படும்.
ஆண்டுதோறும் 5 லட்சம் இண்டர்ன் பணிகளை வழங்க அரசு தனியார் தொழில் நிறுவனங்கள் கூட்டாக இயங்கும். இதில் பட்டதாரிகளுக்கு மாதம் 10000 ரூபாயும் ஐ.டி படித்தவர்களுக்கு 8000 ரூபாய் சம்பளமாக அரசே வழங்கும்.
நேர்மையான தொழில்முனைவோரை உருவாக்கும் வகையில் 25 லட்ச ரூபாய் அளவுக்கு பிணையில்லா கடன் வழங்கப்படும்.
தமிழகத்தில் வேலைவாய்ப்பில் நம் இளைஞர்களுக்கே முன்னுரிமை. தனியார் நிறுவனங்களில் 75% தமிழர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு மாநில ஜி.எஸ்.டியிம் 2.5% மானியம் வழங்கப்படும். மின் கட்டணங்களில் 5% மானியம் வழங்கப்படும்.
ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் முதல்வர் மக்கள் சேவை நண்பர் திட்டம் தொடங்கப்படும். இதன்மூலம் 5 லட்சம் இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
தமிழ்நாடு இளைஞர் ஆலோசனைக் குழு அமைக்கப்படும். இளைஞர்கள் தங்களின் கருத்துகளை இதில் தெரிவிக்கலாம்.
தமிழ்நாட்டின் பாரம்பரியம் கலாசாரத்தை உலகளவில் பரப்ப நவீன படைப்பாளி பள்ளிகள் அமைக்கப்படும்’ என்றார்.
