தொடர் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையின் ஒரு பகுதியாக, வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்து தாழ்வு நிலை புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிக கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெல்லை மாவட்டத்துக்கு ஆரஞ்ச் அலெர்ட்டும் விடப்பட்டது.

இதற்கிடையே, நெல்லையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக கனமழை கொட்டி வரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு தினங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது.

எனவே வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மீட்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து உதவி ஆய்வாளர் லாரன்ஸ் தலைமையில் 25 பேர் கொண்ட மீட்பு படையினர் அதிநவீன உபகரங்களுடன் இன்று இரவு நெல்லை வந்தடைந்தனர்.

மேலும் நெல்லை ராதாபுரத்தில் அமைந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில், ஒரு கம்பெனியை சேர்ந்த 28 தேசிய மீட்பு படை வீரர்களும் தயார் நிலையில் வைத்திருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

கனமழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கும் பொருட்டு பேரிடர்கால அவசர கட்டுப்பாட்டு மையம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ.24) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார். அதே போல, தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, தென்காசி மாவட்டத்திற்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version