சென்னையில் இன்று (மே 27) வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளநிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக, ஜூன் 1ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியில் சில இடங்களிலும் இன்று (மே 27) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, பல இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே நீண்ட நாட்களாகத் தமிழகத்தை வாட்டி வதைத்து வந்த கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம், நாளையுடன் (மே 28) நிறைவடைகிறது. இது பொதுமக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. மழையின் தாக்கம் இருந்தாலும், சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் வெப்பமும் ஈரப்பதமும் கலந்து காணப்படும் என்றும், சென்னையில் இன்று (மே 27) அதிகபட்ச வெப்பநிலை 105 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டும் என்றும் பகல் நேரங்களில் அசௌகரியமான சூழல் நிலவலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசும்போது பாதுகாப்பாக இருக்குமாறும், நீர்நிலைகள் மற்றும் திறந்தவெளி பகுதிகளில் கவனத்துடன் இருக்குமாறும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மீனவர்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அக்னி நட்சத்திரம் நாளை (மே 28) முடிவடைவதால், வரும் நாட்களில் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளதாக வானிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
