திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, சீட் கிடைக்காத அதிருப்தியில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள் அடுத்தடுத்து பதவி விலகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த நிர்வாகிகள் வரிசையாக போர்க்கொடி தூக்கி வருகின்றனர். சென்னை தி.நகர் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான ஜெ. கருணாநிதி, தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக, அவர் வகித்து வந்த திமுக பகுதிச் செயலாளர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். கடந்த தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே அவருக்கு சீட் மறுக்கப்படக் காரணம் என்று கூறப்பட்டாலும், அவரது ஆதரவாளர்கள் தலைமைக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர்.
இதேபோல், வேலூர் மாவட்டத்திலும் திமுகவிற்குள்ளே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி-யின் மகனும், குடியாத்தம் வடகிழக்கு ஒன்றிய செயலாளருமான சுரேஷ்குமார், தனக்குச் சாதகமான பதில் கிடைக்காததால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆதிக்க சக்திகளின் அழுத்தத்தால் பதவி விலகுவதாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி திமுக ஒன்றியச் செயலாளர் ஒருவர் திமுகவில் இருந்து பதவி விலகியுள்ளார்.
இதற்கிடையே, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த முன்னாள் எம்.எல்.ஏ பி.என்.பி. இன்பசேகரன், பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) இணையப் போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே அதிமுகவில் இத்தகைய விலகல்கள் நிகழ்ந்து வரும் நிலையில், தற்போது திமுகவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
