ஜனநாயகன் படத்தில் மத பிரச்சனைகளை தூண்டும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 9 ஆம் தேதியே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாக இருந்தது. ஆனால் திடீரென யாருமே எதிர்பார்க்காத வகையில் இப்படத்திற்கு சென்சார் பிரச்சனை ஏற்பட்டு ரிலீஸ் தள்ளிப்போய்விட்டது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்திற்கு தணிக்கை சான்று வழங்கவேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், படத்திற்கு தணிக்கை சான்று வழங்கவேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி உத்தரவிற்கு எதிராக தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தது தணிக்கை வாரியம்.

இந்தசூழலில் ஜனநாயகன் பட நிறுவனத்திற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்த உத்தரவால் படம் பொங்கலை தாண்டி செல்லும் நிலை ஏற்பட்டதால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்தது தயாரிப்பு நிறுவனம்.
இதனை தொடர்ந்து விஜயின் ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காதது தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் கடந்த 15ம் தேதி விசாரணைக்கு  வந்தது. அப்போது பேசிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜனநாயகன் பட விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்க எங்களுக்கு விருப்பமில்லை, வழக்கில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை, உங்கள் தரப்பு வாதங்களை சென்னை உயர்நீதிமன்ற அமர்வில் தெரிவியுங்கள் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். ஜனநாயகன் பட வழக்கை ஜன.20ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அப்போது மத்திய தணிக்கை வாரியம் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசனும், படத்தயாரிப்பு குழு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரனும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.
இந்நிலையில் நீதிபதிகள் இந்த வழக்கில் இன்று ( ஜன.27) தீர்ப்பளித்துள்ளனர். ஜனநாயகன் படத்தில் மத பிரச்சனைகளை தூண்டும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தா, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு,படத்தில் ராணுவ சின்னங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அன்னிய சக்திகள் நாட்டில் கலவரம் ஏற்படுத்துவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தீவிரமான புகார் வந்துள்ளதால், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தீவிரமான புகார் கூறப்பட்டுள்ள நிலையில், பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்காமல் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என குறிப்பிட்டனர்.

மேலும், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்து வழக்கில் கோரிக்கையை திருத்தம் செய்து பட நிறுவனம் மனுத்தாக்கல் செய்யலாம். அந்த மனுவுக்கு சென்சார் போர்டு பதிலளிக்க அவகாசம் வழங்கி தனி நீதிபதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version