கடந்த 2022ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நாற்பத்தி ஐந்து மற்றும் 46-வது பத்திகளை நீக்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2021ல் வேலைக்கு பணம் வாங்கியது தொடர்பான சர்ச்சையை சம்மந்தப்பட்ட நபர்களுடன் பேசி சமரசமாக தீர்த்துவிட்டதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜூலை 30ம் தேதி அன்று செந்தில் பாலாஜி மீதான குற்ற வழக்கை ரத்து செய்தது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி சேலத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார், மேலும் ஊழல் தடுப்பு சட்டத்துன் கீழ் வழக்கு பதிய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்
அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமையிலான அமர்வு, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், குறிப்பாக இதுபோன்ற வேலைக்கு பணம் பெற்ற விஷயங்களில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரு தனிப்பட்ட பண விவகாரம் போல ஒரு வழக்கை முடிக்க அனுமதிக்காமல், முழு ஊழல் குறித்தும் விரிவான விசாரணையை மேற்கொண்டிருக்க வேண்டும்,சாதாரண முறைகேடு வழக்கில் கூட ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதியாமல் விட்டிருக்க மாட்டார்கள், ஆனால் இங்கு விசாரணை அதிகாரி அவ்வாறு செய்யவில்லை, ஏனெனில் விசாரணை அதிகாரி அச்சத்தில் இருந்திருப்பாரோ இந்த சந்தேகம் உள்ளது(willing to strike but afraid to wound) என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர். மேலும் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிய வேண்டும் எனவும் தமிழ்நாடு காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேற்கண்ட பத்தியை நீக்க வேண்டும் எனக்கோரியே உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். தீர்ப்பில் 45 மற்றும் 46வது பத்தியில் கூறப்பட்டுள்ள உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்களால் வழக்கு விசாரணையில் மனுதாரருக்கான சம வாய்ப்பு என்பது மறுக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்துக்களால் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையில் தாக்கம் என்பது ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இது சுதந்திரமான ஒரு விசாரணை நடைபெறுவதற்கு முட்டுக்கட்டையாக அமைந்து விடும். எனவே செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையை நியாயமான முறையில் சுதந்திரமான முறையில் நடைபெறுவதற்காக உச்சநீதிமன்றம் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கிய தீர்ப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
