கரூரில் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து 2ஆம் நாளக ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர்.

கரூர் வேலாயுதம்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உள்ளது. மேலும் பலர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஒருங்கிணைந்த விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளது. இந்நிலையில், விபத்து தொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (அக்-05) கரூர் துயர நிகழ்வு குறித்து, சம்பவம் நடந்த இடத்தில், சிறப்பு புலனாய்வு குழு தங்கள் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். இன்று 2ஆம் நாளாக கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

இந்த வழக்கு காரணமாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நகர செயலாளர் பவுன்ராஜ் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

அதேபோல இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்த காவல் துறை அதிகாரிகளுடனும் விசாரணை நடத்த உள்ளனர். தற்பொழுது கரூர் அரசு விருத்தினர் மாளிகையில் முகாமிட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவினர் தொடர் விசாரணை குறித்து, ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version