கரூர் கூட்ட நெரிசல் வழக்குகளில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பிய கண்ணன், டேவிட், சசி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அரசு தரப்பில் தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதற்கிடையில், கரூர் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சமூக வலைத்தளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பதிவுகள் பதிவிடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு தரப்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அந்த செய்திக் குறிப்பில், ‘கரூர் பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து எவ்வித வதந்தியையும் யாரும் பரப்ப வேண்டாம். விசாரணை அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வலைதளங்களில் சிலர் பரப்பும் பொய் செய்திகள் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைகிறது.

எனவே, பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்றும், மீறி செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என சென்னை காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக சமூகவலைதளங்களில் வதந்தி பரப்பியதாக 3 பேரை கைது செய்தனர். மூன்று பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல், சமூக வலைதள பிரமுகர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பு குறித்தும், நீதிபதி குறித்தும் அவதூறு பரப்பிய 3 தவெகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக புதுக்கோட்டையை சேர்ந்த கண்ணன், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த டேவிட், பெருந்துறையை சேர்ந்த சசி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரையும் சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து, இன்னும் பலர் கைது செய்யப்பட உள்ளதாகவும், வெளிநாட்டில் உள்ள நபர்களை அந்நாட்டு தூதரகங்கள் மூலம் அழைத்து விசாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version