கரூர் மாவட்டத்தில் சாமி கும்பிடுவதில் பட்டியலின மக்களிடம் பாகுபாடு காட்டுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசியலமைப்பின் பாதுகாவலர் நீதிமன்றம் தான் என்று தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டம் பொருந்தலூர் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழாவின் போது தீச்சட்டி எடுத்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் செல்வதை உறுதிப்படுத்தக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், நெரூர் வடக்கு பகுதி ஸ்ரீ ஆரவாயி அம்மன் கோவில் திருவிழாவின் போது தேரை, பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கும் கொண்டு செல்லவும், எவ்விதமான பாகுபாடும் இன்றி விழா நடத்தக் கோரியும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
இதுதொடர்பாக எந்த புகாரும் வரவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சமூகத்தில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றனர். அரசின் கொள்கைகள் அனைத்தும் பேப்பர் வடிவில் மட்டுமே உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், நடைமுறையில் இல்லை என வேதனை தெரிவித்தனர். அரசியலமைப்பின் பாதுகாவலர் நீதிமன்றமே என்றும் ஒவ்வொருவரின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகள் ஆன பின்னரும் இதுபோன்ற வழக்குகள் தாக்கலாவது வேதனை அளிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இன்னும் சில ஊர்களில் சட்டை அணிந்து போக முடியவில்லை என குறிப்பிட்ட நீதிபதிகள் மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகளை கண்டறிய வேண்டியது ஆட்சியரின் கடமை என தெரிவித்தனர். திருவிழா கொண்டாடுவதே அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் என நீதிபதிகள் குறிப்பிட்டனர். சாதிய ரீதியான வேறுபாடுகளை களைவதற்காக பாடுபடும் அரசு அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளடக்கிய குழு அமைத்து இதுபோன்ற பிரச்சனை இனியும் தொடராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்படும் என்று கூறி வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.