பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் சர்வதேச அணுசக்தி அமைப்பின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானுடனான பதற்றம் நீடிக்கும் நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவ தளபதி உபேந்திர திவேதி ஆகியோர் பயணம் மேற்கொண்டனர். ஸ்ரீநகரில் ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களுடன் ராஜ்நாத் சிங் கலந்துரையாடினார். அப்போது, பயங்கரவாதிகளுக்கு எதிராக வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்க தலை வணங்குவதாக அவர் தெரிவித்தார்.

இந்திய ராணுவ வீரர்களின் சேவைக்கு நாடே கடமைப்பட்டுள்ளது என்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் நாடே பெருமை கொள்வதாகவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். இந்தியா தனது மக்களை பாதுகாப்பதுடன், எதிரி நாட்டுக்கு பதிலடி தருவதும் நிரூபணம் ஆகியுள்ளதாக பெருமிதம் தெரிவித்த அவர், முரட்டுத்தனமான நாட்டுக்கு அணு ஆயுதம் தேவையா? எனக் கேள்வி எழுப்பினார். பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்திருப்பதை சர்வதேச அணு ஆயுத முகமை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

இந்தநிலையில், பாகிஸ்தானின் அணு ஆயுதக் கிடங்கை சர்வதேச அணுசக்தி நிறுவனம் மேற்பார்வையிட வேண்டும் என்ற மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூற்றுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜ்நாத் சிங்கின் பேச்சு, உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் ஆணை மற்றும் பொறுப்புகள் குறித்த முழுமையான அறியாமையின் பிரதிபலிப்பு எனக் கூறியுள்ளது. இந்த பொறுப்பற்ற கருத்துக்கள், இந்தியாவின் பாதுகாப்பின்மை மற்றும் விரக்தியை வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, இந்தியாவுடனான சமீபத்திய ராணுவ மோதலின் போது பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு அணுசக்தி நிலையத்தில் இருந்தும் கதிர்வீச்சு கசிவு அல்லது வெளியீடு எதுவும் இல்லை என உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான IAEA தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் அணுசக்தி நிலையங்கள் அமைந்துள்ள கிரானா மலைகளை இந்திய ராணுவம் தாக்கியதாக செய்திகள் வெளியானது. இதனை விமான நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி மறுத்திருந்தார். இந்தநிலையில்தான் பாகிஸ்தான் அணுசக்தி நிலையங்களில் இருந்தும் கசிவில்லை என சர்வதேச அணுசக்தி அமைப்பின் அறிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version