கடந்த 6ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற கைத்தறி மற்றும் கைவினைஞர்களுக்கான ஒரு முக்கிய நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அந்த துறையை சேர்ந்த அமைச்சர் ஆர். காந்தி இந்த முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மாறாக, அதே நேரத்தில் நடைபெற்ற நகராட்சி நிர்வாகத்துறை தொடர்பான மற்றொரு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டதாகக் கூறப்பட்டது.
இதனையடுத்து, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் போது, அமைச்சர் காந்தி அவர்கள் முதல்வரைச் சந்தித்து ஒரு புத்தகத்தைப் பரிசாக வழங்க முற்பட்டார். அப்போது, துறை சார்ந்த முக்கிய நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டு வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காகவும், தாமதமாக வந்ததற்காகவும் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக கோபமடைந்தார். அமைச்சர் விளக்கம் அளிக்க முயன்றபோதும், முதல்வர் அவரை மீண்டும் எச்சரிக்கும் விதமாகப் பேசிய காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகி பேசுப்பொருளானது.
இதேபோல், நேற்று ராணிப்பேட்டையில் நடைபெற்ற டாடா தொழிற்சாலை திறப்பு விழாவில் அமைச்சர் காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்துவிட்டு மற்ற அமைச்சர்களான நேரு, ராஜா, எம்.பி. ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோருடன் குழு போட்டோ எடுத்துக்கொண்டார். இதன்மூலம் அமைச்சர் காந்தி மீது முதல்வர் அதிருப்தியில் இருப்பது தெளிவாகியுள்ளது. இதனால் அவரது அமைச்சர் பதவியை பறிக்க முதல்வர் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், ஒரு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கினால் திமுகவின் வாக்கு சதவீதம் குறையக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
