தவெக ஆட்சி 3 மாதங்கள் தான் இருக்கும் என்று பல பொறுப்புகளில் இருந்த மு.க.ஸ்டாலின் பேசியிருக்கக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கெலமங்கலம் பேரூராட்சியின் அண்ணாநகர், சுல்தான் பேட்டை, ஜீவா நகர், விருப்பாச்சி நகர் உள்ளிட்ட இடங்களில் இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோயில்களுக்கு சொந்தமான நிலத்தில் பல ஆண்டுகளாக வீடுகள் கட்டி 2 தலைமுறைகளாக வசித்து வரும்நிலையில், தற்போது வீடுகளை அப்புறப்படுத்தி நோட்டீஸ் வழங்கிய இந்து அறநிலையத்துறை, வருவாய்த் துறையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய அளவில் இந்திய கூட்டணியில் உள்ளதாகவும், தேச நலனுக்காக இந்திய கூட்டணி வலிமை பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் சில வெளியேறி தவெக ஆட்சியில் பங்கேற்றுள்ளதாக தெரிவித்த அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியை தொடர்ந்தாலும், வெளியேறினாலும் நிர்வாகக் குழுவை கூட்டியே முடிவெடுக்கும் என்றார். இம்மாதம் 10, 11 அன்று நடைப்பெறும் கூட்டத்தில் ஆலோசித்து தங்கள் கூட்டணி முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக குறிப்பிட்டார். தவெக ஆட்சி 3 மாதங்கள் தான் நீடிக்கும் என பல பொறுப்புகளில் இருந்த தமிழகத்தின் மூத்த அனுபவமிக்க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கக் கூடாது என்றார். மீண்டும் தேர்தலோ, ஆளுநர் ஆட்சியோ வரக்கூடாது என்பதற்காகவே தவெகவை வெளியில் இருந்து ஆதரிப்பதாக வீரபாண்டியன் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version