நெல்லை மாநகராட்சி மேயர் அறையில்  முதலமைச்சர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்ட விவகாரமும், மேயரின் இருக்கை மாற்றமும் சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், அதற்கு மேயர் ராமகிருஷ்ணன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அரசு அலுவலகங்களில் அவரது புகைப்படத்தை வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நெல்லை மாநகராட்சி மேயர் அறையில் புதிய முதலமைச்சரின் புகைப்படம் வைக்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்தது.

தற்போது இந்த சர்ச்சைகளுக்கு இடமின்றி, மேயர் அறையில் அவரது பிரதான இருக்கைக்கு பின்புறமாக தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின் மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகிய மூவரின் புகைப்படங்களும் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. மேலும், மேயரின் மேசைக்கு முன்புறம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

இதற்கிடையே, மேயர் ராமகிருஷ்ணன் தனது வழக்கமான பிரதான நாற்காலியில் அமராமல், பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகள் அமரும் பகுதிக்குத் தனது இருக்கையை மாற்றியுள்ளார். தற்போதைய முதலமைச்சரின் புகைப்படத்திற்கு கீழே அமர்ந்து பணியாற்ற விருப்பமில்லாததால் தான் அவர் இருக்கையை மாற்றினாரா என்ற கேள்வி எழுந்தது.

இந்த சர்ச்சை குறித்துப் பேசிய திமுக மேயர் ராமகிருஷ்ணன், “அரசு அலுவலகம் என்பதால் அதிகாரிகள் தரப்பில் இந்த புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய முதலமைச்சரின் படத்திற்கு கீழ் அமர விருப்பமில்லை என்பது போன்ற கருத்துகளில் உண்மையில்லை. என்னை உருவாக்கிய எனது தலைவர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்திற்கு அருகில் அமர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாகவே எனது இருக்கையை மாற்றியமைத்தேன். மற்றபடி இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை; இதனால் மாநகராட்சிப் பணிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version