தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைமுறைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், மாநிலத்தின் தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தத்தை மாற்றிவிட்டு, சாய்குமாரை புதிய தலைமைச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் நியமித்ததற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு எழுதியுள்ளார்.
அதில், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதன் நடைமுறைகள் தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வந்த முருகானந்தத்திற்கு பதிலாக சாய் குமார் என்பவரை புதிய தலைமைச் செயலாளராக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இந்த தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற பணிமாறுதலுக்கு, திமுக தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் இதற்கான எவ்விதக் காரணங்களும் குறிப்பிடப்படவில்லை.
மேலும், முருகானந்தம் குறித்து எந்தவொரு முக்கிய அரசியல் கட்சியும் எவ்விதப் புகாரும் அளிக்கவில்லை. அவர் அப்பதவியிலிருந்து இடமாற்றம் செய்யப்படுவதற்கு எவ்விதமான தர்க்கரீதியான அல்லது நியாயமான காரணங்களும் இல்லை. தமிழ்நாட்டில் தேர்தல் நடைமுறைகள் தொடங்கி நடைபெற்று வந்தாலும், அதனால், அரசாங்கத்தின் செயல்பாடுகள் முடங்கிவிட கூடாது. அடுத்த அரசு அமைந்து புதிய அமைச்சரவை பதவியேற்கும் வரையில், நிர்வாகத்தில் ஒரு தொடர்ச்சி இருக்க வேண்டியது அவசியமாகும்.
குறிப்பாக, அரசியல் கட்சித் தலைமை தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் இக்காலகட்டத்தில், அரசாங்கத்தின் அன்றாடச் செயல்பாடுகளைக் கண்காணித்து நெறிப்படுத்துபவர் தலைமைச் செயலாளரே. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முந்தைய இந்த மாதத்தில், நிர்வாகம் சார்ந்த பல்வேறு வழக்கமான கோப்புகள், நீதிமன்ற வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட பல முக்கியப் பணிகள் கையாளப்பட வேண்டியுள்ளன.
முருகானந்தம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வருவதால், தேர்தல் காலத்தில் அரசாங்கத்தின் செயல்பாடுகள் எவ்விதத் தடையுமின்றிச் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு மிகவும் பொருத்தமானவர் அவரே. இத்தகைய சூழலில், சாய்குமாரை தலைமைச் செயலாளராக நியமித்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற்றுக்கொண்டு, முருகானந்தத்தை மீண்டும் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராகப் பணியமர்த்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோல், ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் மிட்டலை DVAC-இன் தலைமை இயக்குநராக நியமித்திருப்பதற்கு எங்களின் கடும் ஆட்சேபணையைத் தெரிவித்துக் கொள்கிறோம். DVAC-இன் தலைமை இயக்குநர் பதவிக்கும், தேர்தல் நடத்தும் பணிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அரசியலமைப்பின் 324-வது பிரிவின் கீழ் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் என்பது, வாக்காளர் பட்டியலைத் தயாரித்தல் மற்றும் தேர்தல்களை நடத்துதல் ஆகிய பணிகளை மேற்பார்வையிடுதல், வழிநடத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு மட்டுமே உரியதாகும்.
தமிழ்நாடு தேர்தலை நோக்கிச் செல்கிறது என்பதற்காக மட்டும், அரசின் அனைத்து அதிகாரங்களையும் செயல்படுத்தும் வகையில், தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட ஒரு வரம்பற்ற அதிகாரமாக இது அமையாது. அரசியலமைப்பும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்கள் 1950 மற்றும் 1951-உம், தேர்தல் தொடர்பான பணிகளைச் செய்வதற்கான அதிகாரத்தை மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியுள்ளன.
தேர்தல் காலத்தில், தேர்தல் ஆணையமானது அரசுக்கு மாற்றாகச் செயல்படுவதில்லை. DVAC என்பது, அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பொறுப்பு உள்ள ஒரு அமைப்பு. தேர்தல்களை நடத்துவதில் DVAC-க்கு எவ்விதப் பங்கும் இல்லை. எனவே, தேர்தல்களை நடத்துவது தொடர்பான பணிகளுடன் தொடர்பில்லாத அரசுப் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிக்கவோ அல்லது இடமாற்றம் செய்யவோ தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை.
அதோடு, களங்கமற்ற நேர்மை, நடுநிலைமை கொண்ட ஓர் அதிகாரியை மட்டுமே DVAC-இன் தலைவராக நியமித்திருக்க வேண்டும். சந்தீப் மிட்டல் பா.ஜ.க மற்றும் RSS அமைப்புகளின் ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்த ஒரு உண்மை. சந்தீப் மிட்டல் தனது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில், அவரே ஒப்புக்கொண்ட ஒரு உண்மை இது. இஸ்லாம் மற்றும் “இடதுசாரி சித்தாந்தம்” குறித்து சமூக ஊடகங்களில் அவர் பதிவிட்டுள்ள கருத்துகள், அந்த அதிகாரி ஒருதலைப்பட்சமாகச் செயல்படுபவரே தவிர நடுநிலையாளர் அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறது. ‘தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு’ ஆதரவாகவே அவர் செயல்படுவார். இதுதவிர சந்தீப் மிட்டல் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
நடுநிலையான மற்றும் பாரபட்சமற்ற அரசியலமைப்பு அமைப்பாகச் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் பாஜகவின் தேர்தல் முகவராகச் செயல்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலங்களில் தேர்தல் ஆணையம் எடுத்துவரும் நடவடிக்கைகளை இந்திய மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். அவை அசாமில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு முற்றிலும் மாறாக இருக்கின்றன. அங்கே எந்த அதிகாரிகள் மாற்றமும் நடக்கவில்லை. அங்கே தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போதே அம்மாநில முதல்வரின் எதிரிகளுக்கு எதிராக அசாம் காவல்துறை ஒருதலைப்பட்சமான மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்கிறது.” என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
