செங்கல்பட்டில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்திற்கு அருகே நடைபெற்ற ஒரு கோர விபத்தில், கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 6 கல்லூரி மாணவர்கள், அனுமந்தபுரம் பகுதியில் உள்ள மலைக்கு ‘டிரெக்கிங்’ எனப்படும் மலை ஏற்றத்திற்காகச் சென்றுள்ளனர். அங்குள்ள ராணுவத் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தின் அருகே மாணவர்கள் நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக அங்கு தரையில் கிடந்த பயன்படுத்தப்படாத ராக்கெட் லாஞ்சர் (Rocket Launcher) ஒன்றின் மீது மாணவர் ஒருவர் கால் வைத்ததாகக் கூறப்படுகிறது. அந்த நொடியே பயங்கரச் சத்தத்துடன் அது வெடித்ததில், யாமன்சு என்ற மாணவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த வெடிவிபத்தில் யாமன்சுடன் சென்ற மற்ற மூன்று மாணவர்கள் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த மாணவரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராணுவப் பயிற்சி மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இது போன்ற ஆபத்தான வெடிபொருட்கள் கிடக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்தும், பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
