தமிழக அரசியல் களம் தற்போது ஒரு திக் திக் நிலையை எட்டியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து அதன் பலம் 113-ஆக அதிகரித்துள்ளது. இந்த பலத்துடன் நேற்று மாலை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இருப்பினும், ஆளுநர் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் வராதது தவெக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜனநாயக முறைப்படி தனிப்பெரும் கட்சியை அழைக்காத ஆளுநரின் முடிவிற்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இன்று காலை திடீர் திருப்பமாக, ஆளுநர் மேற்கொள்ளவிருந்த கேரளப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையின் இந்தத் திடீர் மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே, தவெக தலைவர் விஜய் அல்லது அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் இன்று காலை 11:30 மணியளவில் மீண்டும் ஆளுநரைச் சந்திக்க அனுமதி கோரியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தை நாடும் முடிவில் தவெக  இருக்கும் நிலையில், ஆளுநருடனான இந்த இரண்டாவது சந்திப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

மறுபுறம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று நண்பகல் 12 மணிக்கு ஆளுநர் நேரம் ஒதுக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சி அமைப்பதைத் தடுத்து, திமுக – அதிமுக மறைமுகக் கூட்டணி அல்லது மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என கிசுகிசுக்கப்படுவதால் தமிழக அரசியலில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version