சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாஸின் உடல்நலம் குறித்து தொலைபேசி மூலம் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமதாஸிற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பாமகவில் பரபரப்பு ஏற்பட்டது.
ராமதாஸிற்கு ஆஞ்சியோ செய்யப்பட்டதாகவும், இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் எந்த அடைப்பும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து இரு நாட்கள் ராமதாஸ் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமதாஸின் உடல் நலம் குறித்து தொலைபேசி மூலமாக நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.
முன்னதாக நேற்று அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து ராமதாஸின் உடல்நலன் குறித்து அரசியல் தலைவர்கள் நலம் விசாரித்து வருவதுடன் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.