கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய வாதங்களை ஏற்று, அனைத்து தரப்புகளின் மனுக்களை பரிசீலித்து, விசாரணை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

கரூர் விவகாரம் தொடர்பாக தவெக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உள்பட மொத்தம் 5 வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்தும், உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க உத்தரவிடக் கோரியும் தமிழக வெற்றிக் கழகம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு விசாரணைக்கு வந்தது.

வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஷ்வரி, அஞ்சாரியா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசு சார்பில் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோஹத்கி, வில்சன், ரவீந்திரன் ஆகியோர் வாதாடினர்.

இரண்டு நீதிபதிகளும் மனுவின் சாராம்சம் தொடர்பாக விவாதித்து வருகின்றனர். அப்போது, தவெக தரப்பு வழக்கறிஞர்கள், “இந்த விவகாரத்தில் வழக்கில் எதிர்மனுதாரராக இல்லாத ஒருவரை நீதிமன்றம் நேரடியாக விமர்சித்து இருக்கிறது. பல்வேறு கருத்துகளை விஜய் மீது சென்னை உயர்நீதிமன்றம் கூறி இருக்கிறது” என்று வாதிட்டனர்.

இதனையடுத்து நீதிபதிகள், ‘இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் விசாரணை வரம்பிற்கு உட்பட்டது, அப்படி இருக்கையில் சென்னை இருக்கக்கூடிய பிரதான கிளையில் எப்படி இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது என்பதை விவரிக்க வேண்டும்’ என்றனர்.

அப்போது மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், ‘இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடைய அனுமதி பெற்றே, விசாரணை வரம்புக்குள் வராத வழக்கை விசாரணைக்கு எடுக்க முடியும். ஆனால் இந்த விவாகரத்தில் அவ்வாறு எந்த ஒரு அனுமதியும் பெற்றதாக தகவல் இல்லை’ என்றார்.

தவெக தரப்பு மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியன் கூறுகையில், “இந்த விவகாரத்தை பொருத்தவரைக்கும், விஜய் அந்த சம்பவம் நடைபெற்ற உடனடியாக தப்பித்து சென்றதாக அரசு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்ற வாதத்தில் தெரிவித்து இருக்கிறார். ஆனால் இந்த கூற்று முற்றிலும் தவறானது. ஏனெனில் காவல்துறை பாதுகாப்புடன் விஜய் அந்த இடத்திலிருந்து வெளியேறினார்.

பின்னர் நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கில் விஜய் அல்லது த.வெ.க எதிர்மனுதாரராக உள்ளனரா?’ என்று கேள்வி எழுப்பினர்.

தவெக தரப்பு:- இந்த வழக்கில் விஜய் அல்லது அவரது கட்சியோ எதிர்மனுதாரராக இல்லை. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தை பொறுத்தவரைக்கும் பல்வேறு கருத்துக்களை விஜய்க்கு எதிராக கூறி இருக்கிறது.

குறிப்பாக இளைஞர்கள் தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் வரும்போது விஜய் உடைய வாகனத்தில் தட்டுப்பட்டு கீழே விழுந்தபோது கூட அது தொடர்பாக எந்த வழக்கும் இல்லாத நிலையில், சில காணொளி காட்சிகளை வைத்து விஜய்க்கு எதிரான கருத்தை சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. குறிப்பாக இவர் எப்படிப்பட்ட தலைவராக இருக்கிறார் என்று விமர்சனங்களை எல்லாம் சென்னை உயர்நீதிமன்றம் வைத்திருக்கிறது.

தவெக தரப்பு கோபால் சுப்பிரமணியம் :-

கரூர் உயிரிழப்பு சம்பவம் நடந்தவுடன் காவல்துறை தான் விஜய்யை அங்கிருந்து செல்லுமாறு கூறினார்கள். அங்கிருந்த தமிழக வெற்றி கழக்க நிர்வாகிகள் சிலர் காவல் துறையால் பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்க்க அனுமதிக்கப்படவில்லை. விஜய் மற்றும் கட்சியை எதிர்மறுதாரராக சேர்க்க கூட இல்லாமல் அவதூறு கருத்துக்களை சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

தவெக தரப்பு:-

இந்த சம்பவத்தை விசாரிக்க தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள் ஆனால் அந்த விசாரணை மீது நம்பிக்கை குறைவாகவே உள்ளது உண்மை நிலை வெளியே கொண்டு வர வேண்டும். அதற்காக உச்ச நீதிமன்றம் ஒரு சிறப்பு விசாரணை குழுவை ஏற்படுத்த வேண்டும்

ஏனெனில், அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஒரு தரப்பாக வாதிட்டு விட்டு, அதன் பின்பாக அரசு ஒரு விசாரணை குழுவை நியமிப்பது என்பது உண்மையை வெளிக்கொண்டு வராது. எனவே உண்மை நிலையை வெளி கொண்டு வருவதற்கு விசாரணை என்பது கண்டிப்பாக நடைபெற வேண்டும் ஆனால் அந்த விசாரணை என்பது உச்சநீதிமன்றம் அமைக்கும் சிறப்பு விசாரணை குழு மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை.

ஏனெனில் நாங்கள் ஒரு பிரதான எதிர்க்கட்சியாக வளர்ந்து வருகிறோம். இந்த விவகாரத்தில் நியாயமான ஒரு விசாரணை என்பது வேண்டும். எந்த ஒரு தரப்பையும் சாராத ஒரு விசாரணை என்பதுதான் வேண்டும். அதற்காகத்தான் உச்ச நீதிமன்றம் அமைக்கும் சிறப்பு விசாரணை குழுவை கேட்கிறோம்.

நீதிபதிகள்:-

பரப்புரை தொடர்பாக *வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளதா?

தமிழக அரசு :-

அது தொடர்பான ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

நீதிபதிகள்:-

அப்படி பிரச்சாரம் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரிய வழக்கு நிலுவையில் இருக்கும் போது, மற்ற மனுக்களில் நீதிமன்றம் எப்படி உத்தரவிட்டது? தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது, road show நடத்துவது தொடர்பாக வழிகாட்டுதல்கள் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு கிரிமினல் மனுவாக எப்படி பதியப்பட்டது?

விஜய் பாதிக்கப்பட்டவர்களை சென்று சந்தித்தாரா இல்லையா என்பது தற்போது தொடர்பில்லாதது. இதிலிருந்து இரண்டு விவகாரங்கள் தெளிவாகிறது.

மதுரை கிளை வழக்கை விசாரித்த அதே சமயம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றொரு வழக்கை விசாரித்துள்ளது. மதுரை, சென்னை நீதிமன்றங்கள் ஒரே நாளில் வேறு வேறு உத்தரவுகளை எப்படி பிறப்பித்தன? சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து எப்படி எஸ்.ஐ.டி உத்தரவு பிறப்பித்தது?

தமிழக அரசு தரப்பு:-

41 உயிரிழப்புகள் நடந்துள்ளன, இது கொடூரமானது எனவேதான் நீதிமன்றம் இதனை கையில் எடுத்து உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கேள்வி :-

வழிகாட்டுதல்கள் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இது. குறிப்பாக வழிகாட்டுதல்கள் கோரி மதுரையிலும், சென்னையிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மதுரையில் டிவிஷன் பெஞ்சும் சென்னையில் தனி நீதிபதியும் விசாரித்துள்ளனர். உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரணை எடுத்துக் கொண்ட பிறகு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி விசாரணை செய்ய வேண்டிய அவசியம் என்ன எழுந்தது?

தமிழ்நாடு அரசு:-

தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அமைத்திருக்கக்கூடிய சிறப்பு விசாரணை குழுவை தலைமை தாங்குபவர் ஒரு சிறந்த அதிகாரி. அவர் ஏற்கனவே சிபிஐயில் பணியாற்றி இருக்கிறார். இந்த அதிகாரியை அரசு பரிந்துரைக்க வில்லை. மாறாக நீதிமன்றமே அவருடைய திறமையை பார்த்து இந்த சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது.

மேலும், கரூர் சம்பவத்தை பொறுத்தவரை, குறிப்பிட்ட இடத்தில் விஜய் 12 மணிக்குப் வருவதாக கூறிவிட்டு மிக தாமதமாக வந்ததால் விபத்து நடந்துள்ளது. 41 பேர் உயிரிழப்பு, 146 பேர் காயமடைந்தனர்.

உயிரிழந்த சிறுவனின் தந்தை பன்னீர் செல்வம் தரப்பு:-

தான் தற்போது இந்த நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்துள்ளேன். இந்த கரூர் சம்பவத்தில் என்னுடைய மகன் உயிரிழந்துள்ளார். எனவே இந்த சம்பவம் தொடர்பாக ஒரு முழுமையான ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஏனெனில், அரசு ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்து இருக்கிறது. உயர் நீதிமன்றம் ஒரு சிறப்பு விசாரணை குழுவை அமைத்திருக்கிறது. ஆனால், இந்த ஆணையத்தின் மீதும் சிறப்பு விசாரணை குழு மீதும் தனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே முழு உண்மையும் வெளிவரும்.

தமிழ்நாடு அரசு :-

அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ விசாரணைக்கு அனுப்பக்கூடாது. அரிய வழக்குகளை மட்டுமே சூழ்நிலைகளுக்கு ஏற்ப பரிந்துரைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன தீர்ப்பு உள்ளது. அதேபோல இந்த சம்பவம் நடைபெற்ற உடனாக துரிதமாக அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணைய விசாரணையும் நடைபெற்று வருகிறது.

சிறுவனின் தந்தை உயர் நீதிமன்றத்தை அணுகவில்லை. வேறு நபர் தொடர்ந்த வழக்கில்தான் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது உயர் நீதிமன்றம் திறமையான அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. எனவே சி.பி.ஐ விசாரணை தேவை இல்லை.

சிறுவனின் தந்தை தரப்பு:-

சம்பவம் நடைபெற்று என்னுடைய மகன் இறந்த தருவாயில், நான் முதலில் அவனுடைய இறுதிச் சடங்குகளை தான் நடத்தினேன். ஆனால் அரசு தரப்பு கூறுகிறது. முதலில் உயர் நீதிமன்றத்தை ஏன் அணுகவில்லை என்று அவர்கள் நெஞ்சில் ஈரம் இல்லாமல் வாதம் செய்கிறார்கள். நாங்கள் உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணை குழுவை குற்றம் கூற விரும்பவில்லை.

மாறாக அவர்கள் அமைத்திருக்கக்கூடிய அதிகாரி தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்தவர். அதனால் இந்த விவகாரத்தில் உண்மை நிலை வெளிவர வேண்டும் என்றால் பொதுவான ஒரு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் அதனால் தான் சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை வைக்கிறோம்.

ஒரு மனுதாரர் தரப்பு:-

ரௌடிகள் கூட்டத்தில் நுழைந்ததாலும், காவல்துறை தடியடி நடத்தப்பட்டதாலும் தான் விபத்து ஏற்பட்டது. முதலில் பிரசாரம் மேற்கொண்டிருந்த விஜயின் மீது செருப்பு எறியப்பட்டது அப்போது கூட கூட்டத்தில் எந்த ஒரு சலசலப்பும் இல்லை. அதன் பின்பாக திடீரென காவல்துறை தடியடியை நடத்தியது எதற்காக?

தடியடி நடத்தப்படுகிறது என்பது கூட யாருக்கும் தெரியாமல் சிதறி ஓடினார்கள் அதற்கு முன்பாக அந்த கூட்டத்திற்கு உள்ளாக எந்த ஒரு பதிவு எண்ணும் இல்லாத ஒரு ஆம்புலன்ஸ் உள்ளே வேகமாக நுழைந்தது இவ்வாறு அந்த கூட்டத்தில் சமூக விரோதிகள் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மேலும் அந்த கூட்டத்தில் தூக்கி அடிக்கப்பட்ட தண்ணீர் பாட்டில்களில் திமுக உடைய எம்எல்ஏவான செந்தில் பாலாஜி உடைய புகைப்படம் இருந்தது. எனவே இந்த விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. அதேபோல, இந்த சம்பவம் நடைபெற்ற பின்பாக தமிழ்நாட்டினுடைய மூத்த காவல் அதிகாரி மற்றும் ஐஏஎஸ் அதிகாரி ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி இதில் அரசு மீது காவல்துறை மீதோ எந்த ஒரு தவறும் இல்லை என்று முதலிலேயே அவர்கள் justify செய்தார்கள்.

மேலும் கரூர் பகுதியில் இருக்கக்கூடிய எம்எல்ஏவான செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்திப்பை நடத்தி, இதில் காவல்துறை அல்லது அரசினுடைய எந்த ஒரு தவறும் இல்லை என்பதை அவரும் நியாயப்படுத்தி இருக்கிறார். இது அனைத்துமே சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

மேலும் இந்த சம்பவத்தில் இறந்தவர்களுடைய உடல்களை அவசர அவசரமாக உடற்கூறாய்வு நடத்தப்பட்டிருக்கிறது. 41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் அவர்களுடைய உடல்களை உடற்கூறு ஆய்வு செய்ய இரவோடு இரவாக அத்தனை மருத்துவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறார்கள் இது எல்லாம் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது

எனவே இந்த விவகாரத்தை பொருத்த வரைக்கும் அனைத்து சூழ்நிலைகளையும் பார்க்கும் போது காவல்துறையோ அரசு நிர்வாகமோ தவறு செய்யவில்லை என்பதை நியாயப்படுத்தவே இது அனைத்தும் நடைபெற்றிருக்கிறது இதில் யார் உண்மையான குற்றவாளி என்பதை கண்டுபிடிக்கும் நோக்கமே இல்லை. எனவே தான் CBI விசாரணை தேவை

மனுதாரர் பிரபாகரன் தரப்பு :

விஜய் பிரச்சார கூட்டத்தில் இதுபோன்ற கூட்ட நெரிசல் நடைபெற உள்ளது என பிற்பகல் 3.15 அளவில் திமுக உறுப்பினர் ஒருவர் சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன் பின்னர் தான் இந்த சம்பவம் நடந்தது. பதிவிட்ட நபர் முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்.

கரூர் பரப்புரை கூட்டத்தில் எவ்வளவு மக்கள் கூடுவார்கள் என்று கணிக்க காவல்துறை மற்றும் உளவுத்துறை தவறிவிட்டன. கடந்த ஜனவரி மாதம் அதிமுக கட்சி அதே பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்ட போது காவல்துறை அனுமதிக்கவில்லை.

இடையூறாக இருக்கும் என்பதால் அந்தப் பகுதியில் அனுமதி கிடையாது என காவல்துறை கூறியது, ஆனால் செப்டம்பர் மாதம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை பொறுத்தவரைக்கும் காவலதுறையின் முழு தோல்வி என்பது காட்டுகிறது

நீதிபதிகள்:-

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரைக்கும் பரஸ்பரம் குறை சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. என்ன நடந்தது என்பது வெளிவர வேண்டும். உயிரிழந்தவர்களுடைய உடல்களை உடற் கூராய்வு இரவிலேயே நடத்தப்பட்டு இருக்கிறது. உடற்கூறாய்வு நடத்துவதற்கான இருக்கக்கூடிய கட்டமைப்பு என்ன? எத்தனை உடற்கூறு ஆய்வுக்கான டேபிள் உள்ளது?

தமிழ்நாடு அரசு :-

இந்த விவகாரத்தில் அரசு மீது காவல்துறை மீதும் அடுக்கடுக்கான புகார்களை தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறார்கள் தவிர இதில் என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். மேலும் இந்த விவகாரத்தை பொருத்தவரைக்கும் மாவட்ட நிர்வாகத்தினுடைய அனுமதி பெற்று இரவில் உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த விவகாரத்தில் சரியான தரவுகள் மற்றும் ஆதாரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உள்ளோம். அதே வேளையில் தேர்தல் பரப்புரையின் போது ரவுடிகள் களம் இறக்கப்பட்டார்கள் ஆளுங்கட்சிணருடைய நபர்கள் களமிறக்கப்பட்டார்கள் என்று கூறுவதெல்லாம் ஏற்க முடியாது. இதற்கான எந்த ஒரு ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை வெறுமனே ஒரு மனுவை வைத்து தான் இது போன்ற குற்றச்சாட்டை கூறி வருகிறார்கள்

சேலத்தில் ஒரு மாநாட்டிற்காக வந்திருந்த சுமார் 200 மருத்துவர்கள் இந்த உடற் கூறாய்வில் பயன்படுத்தப்பட்டார்கள். பல்வேறு மருத்துவமனைகளில் இந்த உடற் கூறு ஆய்வு நடத்தப்பட்டது. இரவிலேயே நடத்துவதற்கான காரணம் என்னவென்றால் உயிரிழந்த பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினர் அரசிடமும் நிர்வாகத்திடமும் கோரிக்கை வைத்ததன் அடிப்படையிலேயே அது நடத்தப்பட்டது.

பாதுகாப்பு குறைபாடு என்று கூறுகிறார்கள். ஆனால் 600 காவல்துறையினர் அதற்காக அந்த பிரச்சாரத்திற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பட்டிருக்கிறார்கள். நண்பகல் 12 மணிக்கு வரவேண்டிய விஜய் இரவு 7:00 மணிக்கு அவர் வந்திருக்கிறார் காலை முதலே அந்த பகுதியில் குழுமி இருந்த அந்த கூட்டமானது தண்ணீர் உணவுகள் இன்றி தவித்து பலர் சோர்வடைந்து மயக்கநிலை அடைந்தார்கள்

தண்ணீர் கூட இல்லாமல் இருந்த நிலையில் தான் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன அப்படி வழங்கும்போது கூட கூட்டத்தினர் அந்த தண்ணீர் பாட்டிலை வாங்க முண்டி அடித்தனர்

உயிரிழந்த சந்திரா என்பவரது கணவர் தரப்பு:-

இந்த பிரச்சாரக் கூட்டத்திற்கு 600 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் எங்கிருந்தார்கள் என்பது தெரியவில்லை. இதில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன பல சமூக விரோத சக்திகளும் இதில் உள்ள இறங்கி இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. எனவே தான் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோருகிறோம். விபத்தில் ஒரு போலீசார் கூட காயமடையவில்லை

(இதற்கு நீதிபதிகள் சிரிப்பை வெளிப்படுத்தினர்)

பின்னர், கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அனுமதி அளித்தும், அதேபோல பிற மனுதாரர்கள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version