திருத்தணி சிறுவன் ஆள்கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமன் கைது நடவடிக்கையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதேசமயம் பணியிடை நீக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் ஆள்கடத்தல் வழக்கில் ஏடிஜிபிக்கு உள்ள தொடர்பை சிபிசிஐடி போலீசார் விசாரிப்பார்கள் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர் இன்ஸ்டாவில் பழக்கமான தேனியை சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர், கூலிப் படையை ஏவி, கடந்த 6-ம் தேதி தனுஷின் வீட்டை அடித்து நொறுக்கியதோடு, அங்கிருந்த தனுஷின் சகோதரனை கடத்தி சென்றனர். இது தொடர்பாக தனுஷின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக இருந்ததாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி மீதும் புகார் அளிக்கப்பட்டது. இதே வழக்கில் சிறுவன் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டார். துறைரீதியாக அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.
இதனை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராமன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல் புயான்- மன்மோகன் அமர்வு விசாரித்தது. விசாரணைக்கு ஒத்துழைக்கும் போது அவரை ஏன் பணியிடை நீக்கம் செய்தீர்கள் என்றும் இதுகுறித்து தமிழக காவல்துறை பதிலளிக்கவும் நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இடைநீக்கம் தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தற்போது நிலையில் பணியிடை நீக்கத்தை திரும்ப பெற போவதில்லை என்றும், இது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் பணியிடை நீக்கம் என்பது தொடர வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. கூடுதல் டிஜிபி ஜெயராம் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை. அகில இந்திய சேவை விதிகள் அடிப்படையோ தான் விசாரணையைக் கருத்தில் கொண்டு சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பு கூறியது.
மேலும் ஜெயராம் தொடர்பான வழக்கை சிபிஐடி விசாரிக்கும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்தது. உயர்நீதிமன்றத்தில் உள்ள இதுதொடர்புடைய வழக்குகளை விசாரிக்க வேறு அமர்வு அமைக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.