தமிழக முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி அரசியல் கட்சிகள் ,சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் தரப்பில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என ஜனவரி 27ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றமும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை உறுதி செய்தது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்திப் மேத்தா அமர்வில் விசாரணைக்கு இன்று வந்தது.
அப்போது கொடி கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடுவதாகவும்,மேலும் வழக்கு குறித்து பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை ஒத்தி வைத்தனர். முன்னதாக கருத்து சுதந்திரத்தின் படி அரசியல் கட்சிகள் தங்களின் அடையாளங்களை வெளிப்படுத்த உரிமை உள்ள நிலையில் அடையாளங்களை பொதுவெளியில் காட்சிப்படுத்த தடை விதிப்பது அதன் நோக்கத்தையே சீர்குலைத்து விடும் என சி.பி.எம் கட்சி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.