தமிழகம் முழுவதும் 105 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் மோசடி தொடர்பாக 467 புகார்கள் மீது சிறப்பு புலனாய்வு குழு விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

போலி இன்சூரன்ஸ் மோசடி குறித்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில், தமிழகம் முழுவதும் போலி இன்சூரன்ஸ் மோசடி குறித்து விசாரணை நடத்த உயர் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணையை தொடங்கப்பட்டது.

ஆனால், இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும், இன்சூரன்ஸ் மோசடி வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. மேலும் இன்சூரன்ஸ் கம்பெனிகள் கொடுத்த 105 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் மோசடி தொடர்பாக 467 புகார்கள் மீது இதுவரை போலீசார் எப்ஐஆர் பதிவு செய்யவில்லைை எனவும் எப்ஐஆர் பதிவு செய்து அதை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும் எனவும் வாதம் முன் வைக்கப்பட்டது.

அப்போது காவல்துறை தரப்பில், போலி இன்சூரன்ஸ் மோசடி தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த தயாராக உள்ளதாக என்றார். இதை கேட்ட நீதிபதி, 105 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் மோசடி தொடர்பான 467 புகார்கள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும். இந்த வழக்குகளை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், ஓசூர் மோட்டார் வாகன விபத்து நீதிமன்றத்தில் இன்சூரன்ஸ் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் கானாமல் போனது குறித்து ஓசூர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 17ம்தேதி தள்ளி வைத்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version