இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் தான் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், படகுகளை மீட்க கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 400-க்கும் மேற்பட்ட படகுகளில் அனுமதி டோக்கன் பெற்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இதனிடையே, நெடுந்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தென்னரசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை சிறைப்பிடித்துள்ளனர். மேலும், படகில் இருந்த ஜார்ஜ், சுதன், கனகராஜ், சுமித், பரலோக ராஜ், கோபி, ஆரோக்கிய ரூபட், பிரேம்குமார், தினேஷ், ராஜேஸ் ஆகிய 10 மீனவர்களை இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை கைது செய்தனர்.
அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தது இலங்கை கடற்கடை. இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள ஒரு துயரச் சம்பவம் தொடர்பாகவும், தொடர்ந்து அவர்கள் எதிர்கொண்டுவரும் இன்னல்கள் தொடர்பாகவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று அதிகாலையில், இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற இராமநாதபுரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டு மீனவர்கள் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்படுவதும், அவர்களின் மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் மிகுந்த கவலையளிப்பதாக அவர் தனது கடிதத்தில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போதைய நிலவரப்படி, சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட, இதுவரை மொத்தம் 83 மீனவர்களும், 252 மீன்பிடிப் படகுகளும் இலங்கைவசம் உள்ளதாகவும் முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் துயரமான மற்றும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டும், பொங்கல் பண்டிகையினை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடிட ஏதுவாகவும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அரசு உடனடியாக விடுவித்திடவும், தொடர்ந்து இதுபோன்ற கைது நடவடிக்கைகளைத் தடுத்திடவும், மத்திய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.
