தமிழ்நாட்டில் அடுத்த மாதம் இயல்பை விட அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஜூன் 1-ம் தேதி முதல் நேற்று வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும், இயல்பை விட 6% குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் தமிழ்நாட்டில் பெரும்பாலான நாட்களின் வெப்பமான சூழ்நிலையே அதிகம் நிலவியதால், மழைப் பதிவு குறைந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக அடுத்த மாதம் முதல் தமிழ்நாட்டில் இயல்பை விட அதிகமாக மழை பதிவாகும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அந்த வகையில், அடுத்த மாதம் முதல் 2 வாரங்கள் வெப்பசலன மழை தீவிரமாக இருக்கும் என்றும், 3ம் தேதி முதல் 15-ம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் வடகடலோரம், வடக்கு உள்மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் என தமிழ்நாட்டில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பதிவாகக் கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
இதேப் போல், 18-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட பகுதிகள், கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து காணப்படும் எனவும், ஒட்டு மொத்தத்தில் அடுத்த மாதம் இயல்பை விட அதிக மழையும், இயல்பான வெப்பமும் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.