கேரளாவில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் எதிரொலியாக கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக கோவை, நீலகிரி போன்ற மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களில் தமிழ்நாட்டில் இயல்பை விட 97% அதிகளவு மழை பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா செய்தியாளார்களிடம் பேசும் போது, ”கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் 6 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் தென்மேற்குபருவமழை தீவிரமாக உள்ளது. நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பதிவாகி உள்ளதாக” தெரிவித்துள்ளார்.
தேனி, விருதுநகர் மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை பதிவாகியது. 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை ஏதும் இல்லை. கடந்த 3 மாதங்களில் தமிழகத்தில் 245.6 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இதே காலகட்டத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 124.9 சதவீதம்
97 சதவீதம் மழை, இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, இதே காலகட்டத்தில் பதிவான மழை அளவு -120 மி.மீ., இயல்பான அளவு – 50 மி.மீ., இயல்பை விட 129 சதவீதம் அதிகம் எனவும், தெரிவித்துள்ளார்.
சென்னையில் வெப்பநிலை, கடந்த 3 மாதங்களில் ஒரு நாள் கூட 40 டிகிரி செல்சியசை தொடவில்லை. மே 4,5 ஆகிய நாட்களில் 39.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. கடந்த ஐந்தாண்டுகளில் வெப்பநிலை 40, 41 டிகிரி செல்சியசை தாண்டிய நிலையில் இந்தாண்டுதான் 40 டிகிரியை தொடவில்லை எனக் கூறியுள்ளார். தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை இந்தாண்டு இந்தியாவில் அதிகமாக பதிவாகும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. அடுத்த 4 மாதங்களில் தமிழகம், புதுச்சேரிக்கு வர வேண்டிய மழை அளவு 33 செ.மீ., ஆனால் வரும் என எதிர்பார்க்கப்படும் மழையளவு 36 செ.மீ., இது 110 சதவீதத்திற்கு மேல் அதிகம் பதிவாகும் என கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது. வட உள் மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் மற்ற மாவட்டங்களில் இயல்பான அளவாகவும், அதனை காட்டிலும் அதிகமாகவும் மழை பொழியக்கூடும் என அவர் கூறியுள்ளார்.