சென்னையில் மெட்ரோ குடிநீர் ஒப்பந்த லாரிகள் சுமார் 450 லாரிகள் இயங்குகின்றன. இந்த லாரிகள் 6,000 முதல் 12,000 லிட்டர் வரை கொள்ளவு கொண்டவை. மெட்ரோ குடிநீர் வாரிகள் சென்னை மாநகர் முழுவதும் மக்களுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. அவ்வாறு இயக்கப்படக் கூடிய லாரிகளின் உரிமையாளர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் லாரிகளை இயக்கி வருகின்றனர். மூன்றாண்டுகளுக்கு இருமுறை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஒப்பந்தம், 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெற்றது. மீண்டும் புதிய ஒப்பந்தத்தை அறிவிப்பதிலும், அதனை இறுதி செய்வதிலும் தாமதம் ஏற்பட்டதாகவும், தற்போது டெண்டர் இறுதி செய்யப்பட்ட பின்பும், பணி ஆணைகளை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், நவம்பரில் ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இதுவரை அது இறுதி செய்யப்படவில்லை என மெட்ரோ குடிநீர் லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஒப்பந்தத்தை நம்பி புதிதாக வாங்கிய லாரிக்கான முதலாம் ஆண்டு காப்பீடு கட்டணத் தொகை செலுத்துவதற்கான நாட்கள் வந்துவிட்ட நிலையில், இதுவரை ஒப்பந்தம் இறுதியாகததால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உரிமையாளர்களில் பலர் லாரிக்கான மாதத்தவணை செலுத்த முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர். இதனை கண்டித்து வேலைநிறுத்தம் அறிவித்திருந்த நிலையில் 4 நாட்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.