சமூக வலைதளங்கள் முழுக்க ‘வேடன்’ என்ற பெயர் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கேரளாவைச் சேர்ந்த சொல்லிசைக் கலைஞரான வேடன் மீது அவதூறுகள் பரவி வருகின்றன. அவரைத் தரக்குறைவாக விமர்சித்த இதழ் ஆசிரியர்  ஒருவர் கைதாகியுள்ளார். அவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை விசாரனை நடத்த வேண்டும் என்று என்று கேரள பாஜக பிரமுகர் ஒருவர் கடிதம் எழுதியிருக்கிறார். இத்தனை நெருக்கடிகளில் சிக்கும் அளவு என்ன செய்துவிட்டார் வேடன்? 

சொல்லிசைக் கலைஞர் வேடன் 

கேரளாவின் திருச்சூரில் பிறந்து வளர்ந்த வேடன், மலையாள சொல்லிசைக் கலைஞராகப் புகழ்பெற்றவர். சொல்லிசைக்காக ஹிரந்தாஸ் என்ற அவர், வேடன் என்று புனைப்பெயர் சூட்டிக் கொண்டார். கொரோனா காலத்தில் குரலற்றவர்களின் குரல் (Voice of Voiceless) என்ற அவரது ஆல்பம் ஹிட்டானது. அது அவருக்குத் திரைத்துறை உட்பட பல வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது. அதன் தொடர்ச்சியாக அரசியல் தன்மை வாய்ந்த பாடல்களைத் தொடர்ந்து பாடி வருகிறார் வேடன். 

அரசியல் கட்சிகளின் ஆதரவு

சாதிய அடக்குமுறைகளை நேரடியாகச் சாடும் வேடனின் பாடல்களுக்குக் கேரளாவின் இடதுசாரி கட்சிகள் ஆதரவளிக்கத் தொடங்கின. கேரளாவில் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் வலிகளை எவ்வித சமசரமும் இன்றிக் கேலியாகவும் சர்ச்சையாகவும் பாடினார் வேடன். கறுப்புச் சட்டை, கழுத்தில் புலிப்பல் டாலர், கலைந்த முடியுடன் மேடையில் தோன்றும் வேடனுக்குத் தனி ரசிகர் படையே உருவானது. கேரள இளைஞர்களின் ஏகோபித்த வரவேற்பை, மிக விரைவிலேயே பெற்றார். மலையாளத் திரையுலகம் மட்டுமன்றி, அண்மையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ படத்தில் ‘கிஸ்ஸஸ் இன் தி கிளவுட்ஸ்’ என்ற பாடலையும் எழுதிப் பாடியிருக்கிறார். 

மீட்டுவில் சிக்கிய வேடன்

வேடனின் புகழைப் போலவே சர்ச்சையும் மிக விரைவாகப் பரவியது. சாதிப் பெயர்களை நேரடியாகக் குறிப்பிட்டுப் பாடும் வேடன் மீது வலதுசாரி ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதற்கு நடுவில், கடந்த 2021-ம் ஆண்டு அவர் மீது பெண்கள் இருவர் பாலியல் குற்றச்சாட்டை வைத்தனர். அதை ஒப்புக்கொண்ட வேடன், தாம் தெரியாமல் தவறு செய்துவிட்டதாக பகிரங்கமாக பேஸ்புக்கில் பொது மன்னிப்பு கேட்டார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் அவருக்குள்ள செல்வாக்கைக் குறைத்தது. ஆனால், இப்போது வரை பாதிக்கப்பட்ட பெண்களிடம் அவர் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுவே அவர் மீது களங்கமாக நிலைத்து வருகிறது. 

அடுத்தடுத்த புகார்கள்

இதனிடையே, கடந்த ஏப்ரல் மாதம் கொச்சியில் வசித்து வந்த வேடனின் வீட்டில் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, 6 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்ததோடு கஞ்சா போதையில் இருந்த வேடன் உட்பட 8 பேரைக் கைது செய்தனர். பிறகு இந்த வழக்கில் வேடனுக்கு ஜாமின் கிடைத்தது. ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே வேடனைக் கேரள வனத்துறையினர் சூழ்ந்தனர். சட்டவிரோதமாக தமது சங்கிலியில் புலிப்பல்லை வைத்திருப்பதாகக் கூறி அவரை வனத்துறையினர் கைது செய்தனர். எர்ணாகுளம் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் வேடன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அது புலிப்பல் அல்ல, சிறுத்தைப்பல் என்றும், அதனைத் தாம் தாய்லாந்தில் வாங்கியதாகவும் விளக்கமளித்தார். அதனடிப்படையில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. வெளியே வந்தவர் மீண்டும் “தெரியாமல் செய்துவிட்டேன்” என்று தெரிவித்தார். 

கண்டனம்… அவதூறு… குற்றச்சாட்டு

இந்நிலையில் ஏற்கெனவே வேடனின் பாடல்களுக்குக் கண்டனம் தெரிவித்து வந்த ஆர்.எஸ்.எஸ், பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள், அவர் மீது அவதூறு பரப்பத் தொடங்கியுள்ளன. அண்மையில் திருவனந்தபுரத்தில் கேசரி என்ற ஆர்.எஸ்.எஸ் ஆதரவு இதழின் ஆசிரியர் என்.ஆர் மது வேடனை தரக்குறைவாக விமர்சித்தார். “வேடன் சாதிய தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறார். நாட்டைத் துண்டாட நினைக்கும் கட்சிகள் அவருக்கு நிதி அளிக்கின்றன. அவர் வளர்ப்பது நச்சுக்கலை” என்று பேசினார். இக்கருத்து பெரும் சர்ச்சையான நிலையில் அவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

மேலும், பாலக்காட்டைச் சேர்ந்த பாஜக கவுன்சிலர் வி.எஸ் மினிமோல், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும், தேசிய பாதுகாப்பு முகமைக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பிரதமர் மோடியை விமர்சித்தும், இந்து மதத்தை இழிவுபடுத்தியும் வேடன் பாடல்களைப் பாடி வருவதாகவும், அதனால் அவரை  தேசிய பாதுகாப்பு முகமை விசாரித்து, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 

வலையில் சிக்குவாரா வேடன்? 

வேடனின் மீது தொடர்ச்சியாக கண்டனம், அவதூறு, குற்றச்சாட்டுகளை இந்து அமைப்புகள் முன்வைத்து வருகின்றன. ஆனால் இவை அனைத்தும் குரலற்றவரிகளின் குரலாக எழுந்துள்ள வேடனை ஒடுக்கும் முயற்சிகள் என்று அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தேசிய பாதுகாப்பு முகமையைத் தூண்டி விடுவதும் அத்தகைய செயல்தான் என்று கண்டித்துள்ளனர். மறுபுறம் கஞ்சா புகைப்பது, புலிப்பல் அணிந்து கொள்வது, பாலியல் விவகாரம் என அடுத்தடுத்து வந்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டு ‘தெரியாமல்’ செய்துவிட்டதாகச் சப்பைக் கட்டு கட்டுவது வேடனின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆதிக்கப் பறவைகளை வேட்டையாடச் சொல்லோடு கிளம்பியிருக்கும் வேடனின் பயணத்தில் இத்தகைய சறுக்கல்கள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version