முறைகேடு வழக்கு தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுக் கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இந்த சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் மற்றும் திமுக அரசு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்த முழு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விசாகன் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கி கணக்கு பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. விசாகன் வீட்டிற்கு வெளியே கிழிந்த நிலையில் இருந்த WHATSAPP SCREENSHOT-களின் பிரிண்ட் அவுட்களையும் அமலாக்கத்துறையினர் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீட்டில் தொடர்ந்து சோதனை நடைபெற்ற அதேநேரம் அவரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று பல மணி நேரமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். டெண்டர் ஒதுக்கீடு, வெளிநாட்டிலிருந்து மதுபானங்கள் இறக்குமதி, டாஸ்மாக் மூலம் கள்ளச் சந்தையில் மது விற்பனை தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.