திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் தொடர்ந்து வரி உயர்வு செய்து பொதுமக்களை வஞ்சிப்பதாகக் கூறி, திமுக மாநகராட்சியை கண்டித்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சி.எஸ். ராஜமோகன் தலைமையில் இன்று வெளிநடப்பு செய்தனர். இந்த சம்பவத்தால் மாநகராட்சி மாமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக ஆட்சிக்கு அதிமுக கண்டனம்:
திண்டுக்கல் மாநகராட்சியின் அவசரக் கூட்டம் இன்று மாமன்ற வளாகத்தில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய உடனேயே அதிமுக மாமன்ற உறுப்பினர்கள், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் எவ்வித நலத்திட்டங்களோ, புதிய பணிகளோ நடைபெறவில்லை என குற்றம்சாட்டினர். அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை மட்டுமே செய்வதாகவும் அவர்கள் விமர்சித்தனர்.
சொத்து வரி, வீட்டு வரி, குப்பை வரி, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு என தொடர்ந்து உயர்வுக்கு மேல் உயர்வேற்றி வருவதால், சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் குடும்பம் நடத்த முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருவதாகவும் அதிமுகவினர் தெரிவித்தனர். இந்தக் கட்டண உயர்வுகளை கண்டித்து கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பல்வேறு போராட்டங்களை நடத்தியும், கண்டன அறிக்கைகளை வெளியிட்டும் திமுக அரசு செவி சாய்க்காமல் உள்ளதாகக் கூறினர்.
மாமன்றத்தில் வெளிநடப்பு:
திண்டுக்கல் மாநகராட்சியில் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு வரிவிதிப்புகள், குறிப்பாக பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ள வரிகளைக் கண்டித்தும், பணிகள் நடைபெறாததைக் கண்டித்தும், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சி.எஸ். ராஜமோகன் தலைமையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பாஸ்கரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உமாதேவி பாரதிமுருகன், சத்தியவாணி மோகன் ஆகியோர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
சி.எஸ்.ராஜமோகன் பேட்டி:
வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சி.எஸ்.ராஜமோகன், “அதிமுக ஆட்சியின்போது எந்த வரிவிதிப்பும் விதிக்கப்படவில்லை. கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆட்சியில் பல்வேறு திட்டங்களைச் சிறப்பாக நடத்தியதோடு, எந்த வரிவிதிப்பும் விதிக்காமல் தமிழக மக்களைக் காத்து வந்தார். ஆனால் திமுக அரசு பதவி ஏற்றதில் இருந்து தமிழக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மின் கட்டண உயர்வால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடுத்தர வர்க்க மக்கள் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்து வருகின்றனர். தற்போது திண்டுக்கல் மாநகராட்சியில் குப்பை வரி, சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி (பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையிலும்) என அனைத்தும் பன்மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்தே நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவம், திண்டுக்கல் மாநகராட்சி மாமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.