பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே நீடித்து வந்த பனிப்போர் நேற்று பகிரங்கமாக வெடித்தது. டாக்டர் ராமதாஸ், அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு என்றும், அவரை பொதுக்குழுவைக் கூட்டி நீக்குவேன் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைத் தைலாபுரத்தில் அளித்த பேட்டியில் முன்வைத்தார். இந்தப் பேட்டி பா.ம.க.வினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த உட்கட்சி மோதலின் அடுத்தகட்டம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கும் சூழலில், கட்சியின் மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோரை இன்று (வெள்ளி) முதல் நாளை மறுதினம் (ஞாயிறு) வரை சந்தித்து அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளார். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள மகாராஜா திருமண மண்டபத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.
இன்றைய கூட்டத்தில், பா.ம.க.வின் அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் அன்புமணி ராமதாஸ் சந்திப்பதாகத் தெரிகிறது. கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட 23 மாவட்டச் செயலாளர்களில் 22 பேர் வருகை தந்துள்ளனர். அன்புமணி வருகை தந்தபோது, “பாமக தலைவர்” என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியது:
“கட்சியில் என்றும் அடிமட்டத் தொண்டராக இருக்கவே விரும்புகிறேன்.”
“பொதுக்குழுவில் நீங்கள்தான் என்னை தலைவராகத் தேர்வு செய்தீர்கள்.”
“தொண்டர்கள் இல்லையென்றால் பாட்டாளி மக்கள் கட்சி கிடையாது.”
“நமக்குள் வேற்றுமைகள் இருக்கக் கூடாது.”
“டாக்டர் ராமதாசின் கொள்கைகளைச் செயல்படுத்துவதற்கு வேகமாக களமிறங்குவோம்.”
“உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை வேகமாகச் செய்ய வேண்டும்.”
“எதிர்பார்த்து ஏமாற வேண்டாம்: விரைவில் செய்தியாளர்களை சந்திக்கிறேன்.”
“பாமக என்பது யாருடைய தனிச்சொத்தும் இல்லை. தொண்டர்களாகிய நீங்கள் தான் பாட்டாளி மக்கள் கட்சி.”
“பொறுப்புகள் வரும், போகும்; தொண்டர்களின் அன்பே நிரந்தரம்.”
அன்புமணி ராமதாஸின் இந்தக் கருத்துகள், கட்சிக்குள் நிலவும் மோதலைத் தணிக்கும் வகையிலும், தொண்டர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையிலும் அமைந்துள்ளன. இந்தக் கூட்டங்களின் முடிவில் பா.ம.க.வின் அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்த தெளிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.