திமுகவின் அவதூறு பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே நீதிமன்றத்தை நாடியுள்ளதாகத் தெரிவித்த அண்ணாமலை, அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என நீலிக்கண்ணீர் வடிப்பதை முதல்வர் ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சாடியுள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தில் பாஜகவின் சதி இருப்பதாகக் குற்றம் சாட்டிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு எதிராக அண்ணாமலை தொடர்ந்த அவதூறு வழக்கு இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் சாட்சியம் அளிப்பதற்காக அண்ணாமலை நேரில் ஆஜரானார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சாமானியர்கள் பொது வாழ்க்கைக்கு வருவதைத் தடுப்பதற்காகவே திமுக இது போன்ற அபாண்டமான பழிச்சொற்களைச் சுமத்துகிறது. யாரிடமும் மன்னிப்பு கேட்கும் பழக்கம் ஆர்.எஸ். பாரதிக்கு இல்லை என்பதால், நீதிமன்றம் மூலம் இதற்குத் தீர்வு காணவே வழக்கு தொடர்ந்துள்ளேன்,” என்றார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அந்த கட்சியை பாஜக விழுங்கிவிடும் என்ற முதலமைச்சரின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்த அண்ணாமலை, 1999 முதல் 2003 வரை திமுக, பாஜக கூட்டணியில் இருந்ததே, அப்போது திமுகவை பாஜக விழுங்கிவிட்டதா?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், நிதிஷ் குமார், ஏக்நாத் ஷிண்டே போன்றவர்கள் குறைந்த இடங்களைப் பெற்றிருந்தாலும் அவர்களை பாஜகவே முதலமைச்சராக்கியது எனவும் சுட்டிக்காட்டினார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி குறித்துப் பரவும் செய்திகளை மறுத்த அவர், “டீயும் காபியும் ஒருபோதும் ஒன்றாகக் கலக்காது, சித்தாந்தங்கள் வேறுபட்டவை” எனக்கூறி, தவெக – பாஜக கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்பதை சூசகமாகத் தெரிவித்தார்.
