தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில், தளி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் ஐந்து இடங்களில் களம் கண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தளி தொகுதியில் ராமச்சந்திரன் மற்றும் திருத்துறைப்பூண்டி தொகுதியில் மாரிமுத்து என இரண்டு இடங்களில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழகத்தில் புதிய அரசு அமைவதற்கான அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இதற்கான ஆதரவு கடிதத்தை தவெகவின் நிர்மல் குமாரிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ராமச்சந்திரன் வழங்கினார். இன்னும் சற்றுநேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனது ஆதரவை தெரிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
