2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகம், கூட்டணி விவகாரங்களில் எதிர்பார்த்த முன்னேற்றத்தைக் காணாதது அக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பவர் ஷேரிங்’ (ஆட்சியில் பங்கு) என்ற கவர்ச்சிகரமான வாய்ப்பை முன்னிறுத்தியும், பெரிய கட்சிகள் எதுவும் இதுவரை தவெக பக்கம் வராதது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய், மூத்த நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி குறித்த தெளிவான முடிவு எட்டப்படாதது அக்கட்சியினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, தவெக மாநாட்டிற்குப் பிறகு விஜய்க்கு ஆதரவான கருத்துக்களைத் தெரிவித்து வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் “நம்ம வீட்டுப் பிள்ளை” எனப் பாராட்டிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தற்போது மாற்று அணிகளில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளனர். குறிப்பாக, தேமுதிக தரப்பு திமுக தலைமையிலான அணியுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வருவது தவெகவிற்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே தவெகவுடன் பேசப்பட்டு வந்த சிறிய கட்சிகளும், தற்போதைய அரசியல் சூழலில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள பழைய கூட்டணிகளையே தேர்வு செய்து வருகின்றன.
மறுபுறம், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்ததால், காங்கிரஸ் கட்சி தவெகவுடன் இணையக்கூடும் எனப் பலமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த மார்ச் 4-ஆம் தேதி திமுக – காங்கிரஸ் இடையே 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் என ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இதனால் கடைசி நேர வாய்ப்பும் கைநழுவிப் போனது குறித்து விஜய் தனது நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. நாம் கோட்டை விட்டது எங்கே? திட்டமிடலில் ஏதேனும் தவறு நடந்ததா? அல்லது ‘பவர் ஷேரிங்’ கொள்கையில் மாற்றம் தேவையா? என்பது குறித்து தவெக தலைமை தீவிரமாகப் பரிசீலித்து வருவதால், வரும் நாட்களில் தவெகவின் அரசியல் நகர்வுகளில் அதிரடி மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
