தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்தவொரு கட்சிக்கும் பாஜக வாக்களிக்காது என்று பாஜக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களின் நலனுக்காகவும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகவும் சட்டமன்றத் தேர்தலில் களம் கண்ட பாரதிய ஜனதா கட்சி, தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளை முழு மனதுடன் ஏற்பதாக அறிவித்துள்ளது. தமிழக மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை மதிக்கும் வகையில், இந்தத் தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கான அதிகாரத்தையோ அல்லது வாய்ப்பையோ மக்கள் தங்களுக்கு வழங்கவில்லை என்பதை உணர்ந்திருப்பதாக அக்கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது.
மக்களின் விருப்பத்திற்கும், ஜனநாயகத் தீர்ப்புக்கும் தலைவணங்குவதாகத் தெரிவித்துள்ள தமிழக பாஜக, மாநிலத்தில் புதிய அரசை அமைப்பதற்கான எந்தவொரு முயற்சியிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் கூறியுள்ளது. ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் எவ்விதமான நேரடிப் பங்களிப்பையும் அல்லது தலையீட்டையும் கட்சி மேற்கொள்ளாது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொள்ளும் எந்தவொரு கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சி ஆதரவளிக்காது என்றும், யாருக்கும் வாக்களிக்கப் போவதில்லை என்றும் அக்கட்சித் தலைமை உறுதிபடத் தெரிவித்துள்ளது. மக்கள் நலனை முன்னிறுத்தித் தொடர்ந்து செயல்படப் போவதாகவும், இந்தத் தேர்தல் முடிவுகளை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு கட்சிப் பணிகளைத் தொடரப் போவதாகவும் பாஜக தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
