மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் அவரது ஆன்மா மன்னிக்காது என்று தமிழக பாஜக விமர்சனம் செய்துள்ளது.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் இதுவரை நடைபெற்று முடிந்த தேர்தல்களை விட முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் அதிமுக, திமுக-வை எதிர்த்து முதல்முறையாக களம் இறங்கி உள்ள தமிழக வெற்றிக்கழகம் தான்.
அரசியல் எதிரி, கொள்கை எதிரி என தி.மு.க., பா.ஜ.க. வை எதிர்த்து விஜய் களமிறங்கியுள்ளார். இதனால் விஜய் அரசியலில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.
இதனிடையே, மறைந்த விஜயகாந்தின் தே.மு.தி.க. திமுக கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டது. இதன் மூலம் தமிழக அரசியலில் புதிய திருப்பமாக முதல் முறையாக தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது. இதற்கு தமிழக பாஜக விமர்சனம் செய்துள்ளது.
தமிழக பாஜக எக்ஸ் தள பதிவில், தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த். அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது”! என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
