சென்னை அப்பலோ மருத்துவமனையில் தொடர்ந்து 6-வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகிச்சை பெற்று வருகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 21-ம் தேதி காலை வழக்கம் போல் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டதால், உடனே சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்த அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 3 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தனர்.
தொடர்ந்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இதயத் துடிப்பில் ஏற்பட்ட சில வேறுபாடுகள் காரணமாகவே தலைசுற்றல் ஏற்பட்டது கண்டறியப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் இதய சிகிச்சை மருத்துவர் செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறிவுறுத்தலின்படி, முதலமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ சோதனையில் உடல்நிலை இயல்பாக இருப்பது தெரியவந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
5ஆவது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதலமைச்சரை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் சந்தித்து நலம் விசாரித்தனர். தொடர்ந்து 6வது நாளாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல்நலம் குறித்து விசாரிக்க முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். மருத்துவமனையில் இருந்தப் படியே அரசு பணிகளை அவர் தொடங்கியதாகவும், அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.