தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மே 4) காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் முடிவுகள் காலை 8:15 மணிக்கே தெரியவரும். இதனைத் தொடர்ந்து, காலை 8:30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
ஒவ்வொரு இயந்திரத்திலும் உள்ள ‘ரிசல்ட்’ பட்டனை அழுத்தும்போது, அந்தந்த வேட்பாளர்களுக்குப் பதிவான வாக்குகள் திரையில் துல்லியமாகத் தோன்றும். இயந்திர வாக்கு எண்ணிக்கையின் முதல் கட்ட நிலவரங்கள் காலை 9 மணி அளவில் வெளியாகத் தொடங்கும்.
இம்முறை தமிழகத்தில் நான்கு முனைப்போட்டி நிலவினாலும், வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெறும் என்பதால் நண்பகல் 12 மணிக்குள் முன்னணி நிலவரங்கள் தெளிவாகிவிடும். இதன் மூலம் எந்தக் கட்சி அல்லது கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்பதை ஓரளவிற்கு முன்கூட்டியே கணித்துவிட முடியும்.
ஒவ்வொரு சுற்று முடிவிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அதிகாரப்பூர்வ முடிவுகளை ஒலிபெருக்கி மற்றும் இணையதளம் வாயிலாக உடனுக்குடன் அறிவிக்க உள்ளனர். தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்த முக்கிய நிகழ்வைக் காண மாநிலமே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.
