தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி (தவாக) அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.
கடந்த மார்ச் 15-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற கட்சியின் அவசர அரசியல் குழு கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் வேல்முருகன், திமுகவிடம் வைத்த 10 கோரிக்கைகள் குறித்தும் அது பற்றிய செய்திகளை விரைவில் எதிர்பார்க்கிறேன் என்றும் கூறியிருந்த நிலையில் கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகள் ஒதுக்க திமுக மறுத்துவிட்டதால் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என்று அறிவித்திருந்தார்.
கடந்த 2021 தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேல்முருகன், இந்த முறை 2 தொகுதிகள் மற்றும் தனிச் சின்னம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். ஆனால், திமுக தலைமை அவரது கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காததே இந்த விரிசலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தவெக, அதிமுக கூட்டணியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், 2026 சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரை திமுக 26 கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. அதோடு, காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுவிட்டது. எனவே, கூட்டணி கட்சிகளுக்கு அவர்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கனவே தேமுதிக, விடுதலைச் சிறுத்தை கட்சி, மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட தொகுதிகளை விட மிகவும் குறைவான தொகுதிகள் கொடுப்பதாக திமுக சொன்னதால் அந்த கட்சிகள் அதிருப்தியில் இருக்கிறது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
