தமிழ்நாட்டில் தனியார் பேருந்துகளின் பயணக் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதிப்பது என்று தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு எந்த நிமிடமும் வெளிவரலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவு கண்டிக்கத்தக்கது என்று பாமக செயல் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தனியார் பேருந்துகளின் கட்டணத்தை இப்போது உயர்த்துவதற்கு மட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்தின் அடிப்படையில் தன்னிச்சையாக உயர்த்திக் கொள்ளவும் அனுமதி அளிக்க தமிழக அரசு தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால், மின்சாரக் கட்டணம் எப்படி ஆண்டுக்கு ஆண்டு ஜூலை மாதத்தில் உயர்த்தப்படுகிறதோ, அதே போல் பேருந்துக் கட்டணமும் இனி ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தப்படும். தமிழக அரசு மட்டுமின்றி, தனியாரும் மக்களை சுரண்டவே இத்தகைய முடிவுகள் உதவும்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறி உயர்நீதிமன்றத்தின் பின்னால் தமிழக அரசு ஒளிந்து கொள்ளக் கூடாது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஜனவரி 23-ஆம் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், எந்த இடத்திலும் தனியார் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தும்படி ஆணையிடவில்லை. மாறாக, இதற்காக அமைக்கப்பட்டுள்ள உயர்நிலைக் குழு, சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகளைக் கேட்டு முடிவு செய்யலாம் என்று தான் கூறியுள்ளது. பெரும்பான்மையான மக்கள் கட்டணத்தை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழ்நாடு அரசு இந்த முடிவுக்கு எவ்வாறு வந்தது? என்பது தெரியவில்லை.

தனியார் ஆம்னி பேருந்துகள் அநியாயமான கட்டணம் வசூலிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும்; அவற்றுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அவற்றின் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், தனியார் பேருந்துகளின் கட்டண உயர்வு குறித்து மட்டும் அவசர, அவசரமாக முடிவு எடுப்பதிலிருந்தே தமிழக அரசு யாருடைய நலனுக்காக செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். கடந்த நான்கு ஆண்டுகளில் திமுகவின் அதிகார மையங்களைச் சேர்ந்தவர்கள் ஏராளமான தனியார் பேருந்துகளின் வழித்தட உரிமையை வாங்கி குவித்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுடன் இணைத்து தான் இந்த முடிவை பார்க்க வேண்டியுள்ளது.

மக்களின் நலன் காப்பது தான் அரசின் கடமை. இதை உணர்ந்து தமிழ்நாட்டில் தனியார் பேருந்துகளின் பயணக் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.

Share.
Leave A Reply

Exit mobile version