பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கிடையே வரும் ஜன. 28 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததில் இருந்தே, தமிழ்நாடு தேர்தலில் பாஜக தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், பாமக உள்ளிட்ட மற்ற கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வர முனைப்பு காட்டி தீவிர பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. அதன்படி, டெல்லி பாஜக தலைவர்கள் தமிழகம் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இந்தநிலையில், ஜன. 28 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜன. 28 ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்களை மேடையேற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக , பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள நிலையில் மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், கூட்டணியை இறுதி செய்து கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்க பிரதமர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டி.டி.வி . தினகரன் , ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோரை கூட்டணியில் சேர்க்க பாஜக தேசிய தலைவர்கள் முயற்சித்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் வருகை, கூட்டணி வலிமையை அதிகரிப்பதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது.
தென் மாவட்டங்களில் கூட்டணியை பலப்படுத்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமி , பார்வர்ட் ப்ளாக் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தேமுதிகவையும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
ஜன. 28 ல் கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் அனைவரும் பங்கேற்பர் என தகவல் வெளியாகியுள்ளது.